டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்-ன் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10602

பெங்களூரு: இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்ததை தொடர்ந்து இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இந்திய அணிக்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும்,மறுபுறம் இத்தொடரின் கேப்டனான ரிஷப் பண்ட் மீதான விமர்சனங்கள் மட்டும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அவரின் பேட்டிங் தான். 

ஏனெனில் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சொதப்பிவரும் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் ஐபிஎல்-ல் பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பை பெற்றார். ஆனால் கேப்டன்சியில் சுமாராகவே செயல்பட்ட பண்ட், ஐந்து இன்னிங்ஸ்களில் 58 ரன்கள் மட்டுமே எடுத்தார்.அதிலும்  ஸ்டிரைக் ரேட் வெறும் 105 தான்.

இந்திய அணியின் முக்கிய அங்கமான ரிஷப் பண்ட்-ன் இந்த மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது. அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டே ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துவீச, அதை விரட்டி அடிக்க முயன்றே திரும்பத் திரும்ப அவுட்டானார். இதன்மூலம் பண்ட் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் பண்ட் நிச்சயம் இருப்பார் என தலைமை பயிற்சியாளர் ராகுல்  டிராவிட் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில், “ரிஷப் பண்ட் இன்னும் நிறைய ரன்களை அடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

அவரும் நிறைய ஸ்கோர் அடிக்க முயன்றும் அது முடியாமல் போனது. இருப்பினும் இது ஒரு பெரிய பிரச்னையில்லை.  ஏனென்றால் அடுத்த சில மாதங்களுக்கான இந்திய அணியில் ,என்னுடைய திட்டத்தில்  ரிஷப் பண்ட் தான் பெரிய பங்காக இருக்கப்போகிறார்.

நான் எதையும் குழப்ப விரும்பவில்லை. மிடில் ஓவர்களில் அதிரடி காட்டி அடித்து ஆடக் கூடிய வீரர்கள் தேவை. அப்போதுதான் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்த முடியும். அதிரடியாக ஆட நினைத்து ஒரு சில போட்டிகளில் அவுட்டாகியிருக்கலாம். 2-3 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவர்களை குறைத்து மதிப்பிடமுடியாது. எனவே மிடில் ஓவரில் விளையாட ஒரு அதிரடி ஆட்டக்காரர், அதுவும் இடதுகை வீரர் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

அதுமட்டுமல்ல ஐபிஎல் 2022-இன் போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 340 ரன்கள் என பெரியளவில் ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும், ஸ்ட்ரைக் ரேட்டின் அடிப்படையில் 158 பிளஸ் கொண்டிருந்த ரிஷப் பண்ட், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல்லில் அபாரமாக ஆடி பெரிய ஸ்கோர் செய்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அதேபோல ஒரு ஆட்டத்தை விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவார் என நம்புகிறோம். மீண்டும் அதிரடியான பேட்டிங்கை மிடில் ஓவர்களில் ஆடுவார்” என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Be the first to comment on "டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்-ன் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட் அறிக்கை வெளியிட்டுள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*