U19 ஆசிய கோப்பை 2021: இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-067

துபாய்: ஐசிசி U19 ஆசிய கோப்பை 2021ல்  நடந்த கடைசி குரூப் ஆட்டத்தில் மென் இன் ப்ளூ ஆப்கானிஸ்தான் சிறுவர்களை 10 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில்  இந்திய அணி வெற்றியை உறுதிசெய்து அரையிறுதிக்கு தங்கள் இடத்தைப் பதிவு செய்தனர் .

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை, சிறப்பாக விளையாடிய கேப்டன் சுலிமான் சஃபி 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 73(86) ரன்கள் குவித்தார்.அதே போல, இஜாஸ் அஹ்மத் அஹ்மத்சாய் 7 சிக்ஸர்கள்  மற்றும் 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 86(68)ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது.

மேலும், 260 ரன்களை இலக்காக கொண்டு துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹர்னூர் சிங்- அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி சிறப்பான தொடக்கத்துடன் களமிறங்கியது.  இதில்,அங்கிரிஷ் ரகுவன்ஷி 17வது ஓவரில் 5 பவுண்டரி உட்பட 35(47)ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேபோல, ஹர்னூர் சிங் 21வது ஓவரில் 9 பவுண்டரி உட்பட 65(74) ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்த 2 விக்கெட்டுகளையும் நூர் அகமது கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, 6(12) ரன்கள் எடுத்திருந்த ஷேக் ரஷீத்தின் விக்கெட்டை பிலால் சமி கைப்பற்றினார் . இதனால், 22வது ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தானிடம் இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மேலும், அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் யாஷ் துல் மற்றும் நிஷாந்த் சிந்து ஜோடி ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்கத் தொடங்கினர்.

இருப்பினும், நிஷாந்த் சிந்து 30வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 19(27) ரன்களுடன் கலேல் அகமதிடம்  ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்நது,  யாஷ் துல்   35வது ஓவரில் 3 பவுண்டரி உட்பட 26(35) ரன்கள் எடுத்திருந்த நிலையில் நூர் அகமதுவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆராத்யா யாதவ் 37வது ஓவரில் 12 (11) ரன்களுக்கு அகமதுவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கவுஷல் தம்பே 4 பவுண்டரி உட்பட 35(29) ரன்களும் ,ராஜ் பாவா 2 பவுண்டரி உட்பட 43(55) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு தங்களது வீரத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினர். இறுதியில், இந்தியா 48 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 262 ரன்களை எடுத்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

இதையடுத்து, வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 30) அன்று நடைபெறவிருக்கும்  அரையிறுதி போட்டியில் இந்திய அணி வங்கதேசம் அல்லது இலங்கை அணியை களத்தில்  எதிர்கொள்ளவிருக்கிறது.