தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்க்ஸ் வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.இரண்டாவது டெஸ்டில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியை தோற்கடித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக டெஸ்ட் தொடரை (11) வென்ற அணி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன், ஆஸ்திரேலியா 10 தொடரை வென்றதே அதிகமாக இருந்தது.
இந்த வெற்றி, இந்திய கேப்டன் கோலியின் 30வது டெஸ்ட் வெற்றி ஆகும். அதிக வெற்றி பெற்ற கேப்டன்கள் பட்டியலில், 37 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் முதலிடத்திலும், மற்றொரு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 35 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழை காரணமாக தடைபட்டது. 3வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.
இரண்டாவது டெஸ்ட் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் கோஹ்லியின் அட்டகாச இரட்டை சதத்தால், 5 விக்கெட் இழப்பிற்கு 605 ரன்கள் என்ற இமாலய இலக்கை அடைந்தது.
பின்பு பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி இந்திய பவுலர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், 275 ரன்களுக்கு சுருண்டது, பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்க அணியை, மீண்டும் பேட்டிங் செய்ய இந்திய அணி பணித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ஒரு இன்னிங்ஸ், 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.
Be the first to comment on "கோலி படை அசத்தல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உலக சாதனை"