ஷார்ஜா: நேற்று துபாயில் (அக்:10) 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் புள்ளி பட்டியலின் அடிப்படையில் 3 மற்றும் 4-ஆம் இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களத்தில் பலப்பரிட்சை நடத்தினர் . இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவதூத் படிக்கல் – கேப்டன் விராட் கோலி ஜோடி நல்லதொரு தொடக்கத்தை கொடுத்து 5 ஓவருக்கு 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 18 வது பந்தில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கேப்டன் கோலி 33 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த சீனியர் பேட்ஸ்மேன்கள் ஸ்ரீகர் பாரத் 9 ரன்னிலும், க்ளென் மேக்ஸ்வெல் 15 ரன்னிலும், ஏபி டிவில்லியர்ஸ் 11 ரன்னிலும் சுனில் நரேன் வீசிய பந்துகளிலேயே ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் பெரிதாக ரன் எடுக்க தவறியதால் விக்கெட் இழக்க இழக்க ரன்ரேட்டும் குறையத் துவங்கியது. எலிமினேட்டர் மேட்ச் போல் இல்லாமல் சொதப்பலான மேட்ச் விளையாடி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 137 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியின் சுழல் பந்து வீச்சாளரான சுனில் நரேன்4 ஓவரில் 21 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி 138 ரன்களை இலக்காக கொண்டு சுப்மன் கில் – வெங்கடேஷ் ஐயர் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போலவே நல்ல தொடக்கம் கொடுத்தனர். எனினும், சுப்மான் கில் 4 பவுண்டரிகளுடன் 18 பந்தில் 29 ரன் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 30வது பந்தில் 26 ரன்கள் (1 சிக்ஸர் உட்பட) எடுத்து ஹர்ஷல் படேலின் பந்தில் விக்கெட் இழந்தார். அடுத்தடுத்து விக்கெட் இழந்த நிலையில் சுனில் நரேன்-ராணா ஜோடி களம் இறங்கினர். இதில் சுனில் ஹாட்ரிக் சிக்ஸர்களோடு தனது இன்னிங்சை தொடங்கினார்.12 வது ஓவரில் ஆட்டத்தின் நிலைமையை தலைகீழாக மாற்றினார். மறுமுனையில் நிதிஷ் ராணா 1 சிக்ஸர் 1 பவுண்டரி என வெற்றிக்கு கைகொடுத்தார். நிதிஷ் ராணா 15 பந்தில் 23 ரன்னும், சுனில் நரைன் 26 ரன்னும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேனார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 10 ரன்னில் (1 பவுண்டரி உட்பட) 12 வது பந்தில் அவுட் ஆனார். வெற்றி வாய்ப்பை பெற 12 பந்துகளில் 12 ரன்கள் இருந்த நிலையில் அப்போது களத்தில் இருந்த ஷாகிப் அல் ஹசன் (9)- கேப்டன் மோர்கன் (5) ஜோடி கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 2வது குவாலிஃபைர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அக் :13 அன்று நடைபெறும் ஆட்டத்தில் முதலாவது குவாலிஃபைர் சுற்றில் வெளியேறிய டெல்லி அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது.
நடப்பு சீசனில் பெங்களூரு அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் சிறப்பான பந்துவீச்சால் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை வசப்படுத்தியிருந்த போதிலும் பந்துவீச்சில் கொல்கத்தா அணியை வீழ்த்தி முடியாமல் தோல்வியை தழுவி எலிமினேட்டர் சுற்றில் இருந்து வெளியேறியது. மேலும் படேல் 2 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் ஒரு சீசனில் அதிக விக்கெட் கைபற்றியவரான சிஎஸ்கே அணி வீரர் பிராவோ (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) பெற்ற சாதனையை சமன் செய்தார்.விராட் கோலி கேப்டனாக தனது கடைசி ஐபிஎல் தொடரில் வெற்றிக் கோப்பையை பெறாமல் கண் கலங்கி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
Be the first to comment on "ஐபிஎல் எலுமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி தனது ஒருங்கிணைந்த ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது."