இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுவதற்காக ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும். இத்தொடர் அக்டோபர் மாதம் நடுப்பகுதியில்தான் நிறைவடையும்.
அதே நேரத்தில், ஜூலை மாதம் இந்திய அணி இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் இந்திய அணி எப்படி விளையாட முடியும், அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் சாத்தியமில்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அவர் கொடுத்த பேட்டியில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் இலங்கை சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், இளம் வீரர்களை உள்ளடக்கிய வீரர்கள் குழு இலங்கை பயணத்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் என தெளிவாகக் கூறியுள்ளார்.
“இந்திய அணி இரு குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மூத்த வீரர்களைக் கொண்ட அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும். ஐபிஎலில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இளம் வீரர்கள், இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் இடம்பிடிப்பார்கள். வேறுவழியில்லை, இதைச் செய்துதான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் 13, 14ஆவது சீசன்களில் தேவ்தத் படிக்கல், சேத்தேன் சகார்யா, ஆவேஷ் கான், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சாஹர், ராகுல் தேவத்தியா போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால், இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் இவர்கள் இடம் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கிடையில் ஷிகர் தவான், ஹார்டிக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்கள் சுற்றுப்பயணத்திற்கு தயாராக இருப்பார்கள் என்று பிசிசிஐ எதிர்பார்க்கிறது.
ஷ்ரேயஸ் ஐயர் தற்போது காயம் காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். ஒருவேளை இவர் குணமடையும் பட்சத்தில் இந்த சுற்றுப்பயணத்திற்கு கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது என பல கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இலங்கை சுற்றுப்பயணத்தில் ஒரு புதிய அணியை அனுப்புவதன் மூலம், வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பைக் கொண்டு இந்தியாவின் வலிமையை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment on "இரண்டாக உடையும் இந்திய அணி, ஒரே நேரத்தில் 2 சுற்றுப் பயணங்கள்: கங்குலி அறிவிப்பு!"