DC vs RCB: கடைசிவரை போராட்டம், விடாது துரத்திய ஹெட்மையர், பந்த்: ஆர்சிபி த்ரில் வெற்றி!

RCB VS DC-Royal Challengers Bangalore beat Delhi Capitals by 1 run
RCB VS DC-Royal Challengers Bangalore beat Delhi Capitals by 1 run

ஐபிஎல் 14ஆவது சீசன் 22ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி த்ரில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் அகமதாபாத் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்லுக்குப் பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும் தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்த நிலையில் நான்காவது ஓவரில் விராட் கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை கிளீன் போல்டு செய்து வெளியேற்றினார் அவேஷ் கான்.

அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை இழந்து தத்தளித்த பெங்களூர் அணியை மீட்கும் பொறுப்பில் கிளென் மேக்ஸ்வெல்லும், ரஜத் படிதாரும் விளையாடினர். இந்த ஜோடி 30 ரன்கள் சேர்த்த நிலையில் மேக்ஸ்வெல் 25 ரன்களுக்கு வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 8.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. ரஜத் படிதார் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்‌ஷர் படேல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

துவக்கத்தில் நிதானமாக விளையாடிய டிவிலியர்ஸ் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டினார். மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரில் மட்டும் டிவிலியர்ஸ் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.

டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இலக்கை துரத்திக் களமிறங்கிய டெல்லி அணியில் ஷிகர் தவன் (6), ஸ்டீவன் ஸ்மித் (4) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். பிரித்வி ஷா மட்டும் நிதானமாக விளையாடி 18 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.

அடுத்துக் களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டத் துவங்கிய நிலையில் 22 (17) ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ரிஷப் பந்த் 58* (48), ஷிம்ரோன் ஹெட்மையர் 53* (25) ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்துச் சென்றனர். கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 21, 11, 12 என ரன்களை குவித்தனர்.. இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால், ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றிபெற்றது.

Be the first to comment on "DC vs RCB: கடைசிவரை போராட்டம், விடாது துரத்திய ஹெட்மையர், பந்த்: ஆர்சிபி த்ரில் வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*