மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும் குயிண்டன் டிகாக்கும் களமிறங்கினர். மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பந்தில் ராகுல் வெளியேறினார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே டிகாக் வெறும் 3 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் வந்த இஷான் கிசானும் 6 ரன்னு வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இதனால் மும்பை அணி 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது வந்த சூர்யகுமார் யாதவ் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய சூர்யகுமார் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ரவி பிஷ்னாய் பந்தில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்துகொண்டிருந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய ரோஹித் ஷர்மா அரைசதம் கடந்தார். அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ரோஹித் ஷர்மா அவுட் ஆனதும் மும்பை அணியின் ரன் வேகம் குறையத் தொடங்கியது. கடைசி ஓவர்களில் பொல்லார்டு, பாண்டியா சகோதரர்கள் பவுண்டரி அடிக்கத் திணறியதால் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு131 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஷமி, பிஷ்னாய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இலக்கைத் துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் சிறந்த துவக்கம் தந்தனர். அகர்வால் 20 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அடுத்து கிறிஸ் கெய்ல் களமிறங்கி, ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இவரும் சிறப்பாக விளையாடியதால், மும்பை பௌலர்கள் விக்கெட் வீழ்த்த திணறினர். ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார். இறுதியில் ராகுல் 60* (52) ரன்களும், கெய்ல் 43* (35) ரன்களும் சேர்த்த நிலையில் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ராகுல் சாஹர் மட்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் நீடிக்கிறது.
Be the first to comment on "MI vs PBKS: மும்பையை திணறடித்த ராகுல்…பஞ்சாப் அசத்தல் வெற்றி!"