டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த் குறித்து சுரேஷ் ரெய்னா ட்வீட் வெளியிட்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் நேற்று வெளியிட்ட ட்வீட்டில், “ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணிக் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்படுவார்” எனத் தெரிவித்தது. இதுகுறித்து ட்வீட் வெளியிட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா, “டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த சீசனில் ரிஷப் அதிசயத்தக்க மாயாஜாலங்களை நிகழ்த்தி, அணியை சிறப்பாக வழிநடத்துவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது ஷ்ரேயஸ் ஐயர் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டார். காயத்தின் தன்மை அபாயகரமானதாக இருந்ததால் கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு, ஷ்ரேயஸுக்கு தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில், அவருக்கு அறுவைச் சிகிச்சை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால், அவர் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் துவங்கும் ஐபிஎல் 14ஆவது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவதில் சிக்கல் எழுந்தது.
இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி விரைவில் புது கேப்டனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த கேப்டன்கள் அஜிங்கிய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டீவன் ஸ்மித் போன்றவர்களில் ஒருவர்தான் அணிக்குத் தலைமை தாங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்தை கேப்டனாக நியமித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ்.
இதுகுறித்து பேசிய ரிஷப் பந்த், “டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 6 வருடங்களாக விளையாடி வருகிறேன். இந்த அணிக்கு கேப்டனாக மாற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. அணி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள். என்னால், முடிந்தவரை சிறப்பாகச் செயல்பட்டு அணிக்குக் கோப்பை பெற்றுத்தர முயற்சிப்பேன். பல மூத்த வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். அவர்கள் என்றும் எனக்குப் பக்கபலமாக இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
ஷ்ரேயஸ் ஐயர் பேசியபோது, “தோள்பட்டை காயம் இன்னும் குணமடையவில்லை. நீண்ட காலம் கூட ஆகலாம். டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தச் சிறந்த கேப்டன் தேவைப்படுகிறார். ரிஷப் பந்த் அந்த இடத்திற்குச் சரியான நபராக இருப்பார். அவர் சமீப காலமாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அணியை அவரால் சிறப்பாக வழிநடத்த முடியும்” என்றார்.
Be the first to comment on "‘ரிஷப் பந்த் தான் வராரு, வச்சு செய்ய போராரு’: சுரேஷ் ரெய்னா புகழாரம்!"