லக்னோ: இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு கடந்த 4 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொதுமக்கள் மட்டுமின்றி கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு வீரர்களும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்து வந்த கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யூசப் பதான்,பத்ரிநாத் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் கடும் பாதுகாப்பு வைக்கப்பட்டிருந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.காயம் காரணமாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார். அதன் பின்னர் கடந்த 4 நாட்களாக சிறிய காய்சல் ஏற்பட்டதாகவும், அவருக்கு செய்த பரிசோதனையில் இன்று கொரோனா உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து லக்னோவில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக ஹர்மன்ப்ரீத் கவுருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ஹர்மன் ப்ரீத் கவுர், எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நான் இப்போது நலமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனை படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த 7 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உங்கள் அன்பினாலும், கடவுளின் அருளினாலும் பூரண குணமடைந்து விரைவில் களத்திற்கு திரும்புவேன் என தெரிவித்துள்ளார். அவருக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதேபோல் சமீபத்தில் ராய்ப்பூர் மற்றும் மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜாம்பவான் அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அந்த அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர்கள் யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள்.
Be the first to comment on "அணியின் கேப்டனுக்கே கொரோன உறுதி….மகளிர் கிரிக்கெட் அணி அதிர்ச்சி….தற்போதைய நிலை என்ன?"