மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ரஹானே சதம் கடந்து அசத்தியதால் இந்திய அணி வலுவான நிலை நோக்கி நகர்ந்து வருகிறது. டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195/10 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அடுத்ததாகக் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 277 ரன்கள் சேர்த்து 82 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.
துவக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் வகையில் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடத் துவங்கினார். இறுதியில் 65 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, மிக அதிக பந்துகளை எதிர்கொண்டு 17 (70) ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறியதால் இந்திய அணி மீண்டும் நெருக்கடி வலையத்திற்குள் சிக்கியது.
இதனால், கேப்டன் அஜிங்கிய ரஹானே, ஹனுமா விஹாரி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விஹாரி 66 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லைன் இவரை வெளியேற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 29 (40) ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டத்தை முடித்துக்கொண்டார். அடுத்து, ரவீந்திர ஜடேஜா, ரஹானே நிலையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரஹானே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 104* ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறார். இது அவருக்கு 12ஆவது சதமாகும். ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதம். மறுமுனையில் ஜடேஜா 104 பந்துகளை எதிர்கொண்டு 40* ரன்கள் எடுத்துள்ளார்.
இருவரின் நிலையான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறும்.
ரஹானேவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பல கேட்ச்களை விட்டு உதவி புரிந்தனர். நாங்கள் ரஹானேவை ஐந்து முறையாக அவுட் செய்திருக்கனும் என மிட்செல் ஸ்டார்க் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் ‘‘ரஹானேயின் சதம் மிகவும் சிறப்பு. அவர் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டு, இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு தலைமை தாங்கி இந்திய அணி என்ற கப்பலை நிலைநிறுதிக் கொண்டார்.
இங்கே சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார். அவர் சதம் அடிப்பதற்கு முன்பு ஐந்து முறை வாய்ப்புகள் வழங்கினார். அதில் மூன்று அல்லது நான்கு முறை அவுட் செய்திருக்கனும். ஆனால் ரன்அடிக்க வேண்டும் என் அதிர்ஷ்டம் அவருக்கு இருந்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
Be the first to comment on "ரஹானே அசத்தல் சதம்… வலுவான நிலையில் இந்தியா!"