KKR vs RR: பட்டைய கிளப்பிய பாட் கம்மின்ஸ்: கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐபிஎல் 13ஆவது சீசன் 54ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் அதிரடியாகப் பந்து வீசியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது

துபாயில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி ரன் மழை பொழிந்தது. ஷுப்மன் கில் 36 ரன்கள் எடுத்த நிலையில், நிதிஷ் ராணா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய ராகுல் திரிபாதி 34 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

சுனில் நரைன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும், கேப்டன் இயான் மோர்கன் 35 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகள் விளாசி 68* ரன்கள் சேர்த்தார். ஆண்ட்ரே ரஸல் (25), பேட் கம்மின்ஸ் (15) இறுதியில் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 191 ரன்களை குவித்தது. ராகுல் தேவத்தியா 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

192 ரன்கள் இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், படுமோசமாகச் சொதப்பியது. ராபின் உத்தப்பா (6), பென் ஸடோக்ஸ் (18), ஸ்டீவன் ஸ்மித் (4), சஞ்சு சாம்சன் (1) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.ஜாஸ் பட்லர் மட்டும் தனியாளாகப் போராடி 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் ராகுல் தேவத்தியா (31), ஷ்ரேயஸ் கோபால் (23) ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். மற்றவர்கள் படுமோசமாகச் சொதப்பியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டும் எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. பாட் கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

ராஜஸ்தான் அணி 192 ரன்கள் இலக்கை துரத்தி முன்னேறும்போது, துவக்கம் முதலே பெரிய ஷாட்களை ஆட முயற்சித்தது. முதல் ஓவரில் 19 ரன்களை எடுத்து அசத்திய நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் சொதப்பியது. கம்மின்ஸ் வேகத்தில் மிரட்ட ஆரம்பித்ததால் விக்கெட்கள் வரிசையாக விழத்தொடங்கின. இதனை கண்டுகொள்ளாமல், ராஜஸ்தான் வீரர்கள் பெரிய ஷாட்களை ஆடுவதில் குறியாக இருந்தனர். இதனால், 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்து பிளே ஆஃப் வாய்ப்பை நழுவவிட்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

Be the first to comment on "KKR vs RR: பட்டைய கிளப்பிய பாட் கம்மின்ஸ்: கொல்கத்தா அணி அபார வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*