இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கயிருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இவரை காண அதிக ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் தோனியை இவ்வளவு அவசர அவசரமாக ஓரங்கட்ட வேண்டிய அவசியமில்லை என முகமது கைப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கைப் கூறுகையில், “நான் முதன்முதலாக தோனியை மத்திய பிரிவுக்காக தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது பார்த்தேன். அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் முன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அவரை பார்த்தேன்.
அப்போது மூன்றாவது வீரராக அவர் களமிறங்கினார். அவருக்கு எதிராக தாக்குதல் திட்டத்தை வகுத்தோம். ஆனால் அதை அவர் சமாளித்து 80-85 ரன்கள் அடித்தார். அதுவும் வெறும் 50 பந்தில் அடித்தார். அப்போதே எனக்கு புரிந்துவிட்டது. தோனி தனது தனித்துவமான ஆட்டத்தால் முக்கியமான வீரராக திகழ்வார் என்பது” என்றார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனி கண்டிப்பாக மீண்டும் போட்டிகளில் பங்கேற்பார் என கைப் தெரிவித்துள்ளார். கைப் மேலும் கூறுகையில், “தோனி ஒரு மிகப்பெரிய வீரர். தவிர 6 மற்றும் 7ஆவது இடங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் கில்லாடி. எத்தனை வீரர்கள் வந்தாலும் சென்றாலும் தோனியின் இடத்தை பிடிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் தோனி நம்பர்-1 வீரர். வேறு யாரை அணியில் இருந்து எடுத்தாலும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்துவிட முடியும். ஆனால் தோனி விஷயத்தில் இது கடினம்.
தோனிக்கு மாற்று வீரர் இல்லை என ஏன் தெரிவிக்கிறேன் என்றால், அவரின் இடத்தில் பல வீரர்களை இந்திய அணி முயற்சி செய்துவிட்டது. ஆனால் இன்று வரை பொறுத்தமான வீரர் கிடைக்கவில்லை. கே எல் ராகுல் இந்த இடத்தில் நீண்டநாள் தாக்குபிடிக்கமாட்டார். அவர் பேக் கப் விக்கெட் கீப்பராக செயல்படுவது தான் நல்லது. ஒரு கீப்பருக்கு காயம் ஏற்பட்டால் அப்போது ராகுல் கீப்பிங் செய்யலாம். அதனால் விக்கெட் கீப்பர் இடத்துக்கு ஒருவரை உருவாக்க வேண்டியது அவசியம். ஆனால் தோனியின் இடம் இன்னும் காலியாகதான் உள்ளது. அவருக்கு இன்னும் விளையாட தகுதி உள்ளது. அதனால் அவரை அவசர அவசரமாக வெளியேற்ற வேண்டிய தேவையில்லை.
Be the first to comment on "இப்போ இவ்ளோ அவசரமா தோனியை ஓரங்கட்ட வேண்டிய அவசியம் என்ன: கைப்!"