சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் விளாசிய வீரர் என்ற வரலாறு படைத்த தினம் இன்று.
இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டிகுவாவில் நடந்த நான்காவது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா 582 பந்தில் 400 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த சாதனைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக டெஸ்ட் அரங்கின் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற லாராவின் முந்தைய சாதனையை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹேடன் (380 ரன்கள்) தகர்த்தார்.
இந்த போட்டியில் லாரா உலக சாதனை படைக்கும் முன்பாக இந்த தொடரில் மொத்தமாக வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் வெறும் 36 ரன்கள் மட்டும் தான். இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் லாரா 86 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் லாரா 313 ரன்கள் எடுத்தார்.
மூன்று வாய்ப்பு
இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் பந்தில் கேட்ச் அப்பீலில் முதல் முறையும், பின்னர் 127 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் வாய்ப்பில் இரண்டாவது முறையும், பின்னர் 373 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது முறையும் என மூன்று அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்றார் லாரா. இப்போட்டியில் லாரா, ராம்நரேஷ் சர்வானுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 232 ரன்களும், ரிட்லே ஜாக்பஸ் உடன் சேர்ந்து 282 ரன்களும் சேர்த்தார்.
அந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது லாரா 400 ரன்கள் என்ற புதிய உலக சாதனையை எட்டினார். இப்போட்டியில் 582 பந்துகளை எதிர்கொண்ட லாரா 43 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என மொத்தமாக 13 மணி நேரம் பேட்டிங் செய்தார். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 751 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங் செய்து இப்போட்டியை டிரா செய்தது.
லாரா இந்த உலக சாதனையை அரங்கேற்றிய பின், கடந்த 2006 இல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை வீரர் மகிளா ஜெயவர்தனா 374 ரன்கள் எடுத்து லாராவின் சாதனையை நெருங்கினார். அந்த போட்டியில் ஜெயவர்தனா – குமார் சங்ககரா ஜோடி 624 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
Be the first to comment on "இது நடந்து 16 வருஷமாச்சு… இன்னும் ஒருத்தணும் தொடக்கூட முடியல… லாரா கெத்துப்பா!"