கொரோனாவால் கட்டாயமாக கிடைத்துள்ள இந்த இடைவேளி இந்திய அணி வீரர்கள் புத்துணர்வு பெறுவதற்கான வரவேற்கபட வேண்டிய ஓய்வு என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடினார்கள். அதன்பின் அவர்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர்.
கடந்த 12-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட இருந்தனர். மழையால் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன்பின் கொரோனாவால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இனி்மேல் கிரிக்கெட் போட்டிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள நீண்ட ஓய்வு இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்த ஓய்வு மோசமானது என நினைக்க முடியாது. ஏனென்றால் நியூசிலாந்து தொடருக்குப்பின் வீரர்கள் உடற்தகுதி, காயம், மனநிலை தொடர்பான பிரச்சினைகளில் வீரர்கள் சிக்கி இருந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.
கடந்த 10 மாதங்களாக இந்திய அணி வீரர்கள் அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி உலக கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றோம். அதன்பின் தற்போது வரை 10 முதல் 11 நாட்களே வீட்டில் இருந்திருப்போம்.
சில வீரர்கள் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடியிருப்பார்கள். இதனால் அவர்களின் சுமையை நினைத்து பார்க்க முடியும். அதனால் இன்றைய சூழ்நிலை கடினம் என்றாலும், வீரர்களுக்காக இது வரவேற்கக்கூடிய ஓய்வு’’ என்றார்.
Be the first to comment on "கொரோனா லாக்டவுன் இந்திய வீரர்களுக்காக வரவேற்கப்பட வேண்டிய ஓய்வு: ரவி சாஸ்திரி சொல்கிறார்"