ஆக்லாந்து : இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
குறைந்த அளவு சர்வதேச போட்டிகளிலேயே ஆடி இருந்தாலும், அவரது முதிர்ச்சி அடைந்த ஆட்டம், அவரை அடுத்த விராட் கோலி என்றும், அடுத்த இந்திய அணியில் கேப்டன் என்றும் ரசிகர்களை பாராட்ட வைத்துள்ளது.
இந்திய அணியில் ஸ்ரேயாஸ்
2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய திட்டமிட்டது. அந்த திட்டத்தில் இந்திய அணியின் தலைவலியாக விளங்கிய நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய தேர்வு செய்யப்பட்டவர் தான் ஸ்ரேயாஸ் ஐயர்.
நான்காம் வரிசை குழப்பம்
2018 முதல் 2019 வரை இந்திய அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய சரியான வீரர் இல்லாத நிலை இருந்தது. பல வீரர்களை பயன்படுத்தியும் திருப்தி ஏற்படவில்லை. இந்த நிலையில், 2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் தொடர்ந்து இரண்டு அரைசதம் அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
தொடர்ந்து நான்கு அரைசதம்
அதன் பின் நடந்த பல டி20 போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு அரைசதம் அடித்து மிரள வைத்தார். அப்போதே இவர் தான் இந்திய அணியின் நிரந்தர நான்காம் வரிசை பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றார்.
பேட்டிங் வரிசை மாற்றம்
எனினும், கேப்டன் கோலி பரிசோதனை முயற்சிக்காக ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் வரிசையை தொடர்ந்து மாற்றி வந்தார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்த அவர் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும், மூன்றாவது போட்டியில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் நின்று, அணிக்கு கை கொடுத்தார்.
முக்கிய காரணம்
டி20 போட்டிகளில் ஒரே பேட்டிங் வரிசையில் பேட்டிங் ஆட ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதும் அவர் டி20 போட்டிகளில் சரியாக ஆடாமல் போக ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கி கலக்கி இருக்கிறார்.
ஸ்ரேயாஸ்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இருந்தார்.
Be the first to comment on "போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்"