கயானா: ஐசிசி 2024 ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நடப்பு தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
குறிப்பாக 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான அரையிறுதிச்சுற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்தை, தற்போது இந்தியா தோற்கடித்து வெளியேற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்கிடையே இப்போட்டி நடைபெறும் கயானா நகரில் மழை பெய்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகளும் காணப்படுகிறது. எனவே இதன்காரணமாக இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
முன்னதாக நடப்பு உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதியன்று அதிகாலை 6:00 மணிக்கு ட்ரினிடாட் நகரில் நடைபெறுகிறது. எனவே அப்போட்டியில் இந்திய அணி விளையாடினால் அதை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். ஆகையால் ஒளிபரப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டிகளில் இந்தியா விளையாடும் என்று ஐசிசி ஆரம்பத்திலேயே அறிவித்தது.
ஆனால் அரையிறுதிப் போட்டி எங்கே விளையாடப் போகிறோம் என்பது குறித்து மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டதாக மார்க் பட்சர் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்களும், விஸ்டன் போன்ற ஊடகங்களும் விமர்சித்தனர். ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ரோஹித் சர்மா மழையை நினைத்து மட்டுமே தாம் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர்,”மழையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதால் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவேளை இப்போட்டி தாமதமாக முடிந்தால் நாங்கள் செல்ல வேண்டிய தனி விமானத்தை தவற விடுவோம் என்பதே எனக்கு இருக்கும் ஒரே கவலையாகும். இருப்பினும் எங்களை அடுத்த போட்டி மைதானத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியது ஐசிசி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தின் பொறுப்பு.
இப்போட்டியை பொறுத்தவரை தற்போதைக்கு எங்களுக்கு சாதகமான முடிவை பெறுவதில் கவனம் செலுத்துகிறோம். எங்களுக்கு கயானாவில் விளையாடுகிறோம் என்பது குறித்து ஆரம்பத்திலேயே தெரிந்ததை நான் சாதகமாக நினைக்கவில்லை. நிறைய வீரர்கள் இதுபோன்ற வெவ்வேறு மைதானங்களில் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து வீரர்களும் இங்கே விளையாடியிருப்பார்கள் என்பதை நான் உறுதியாக சொல்வேன். எனவே இது சாதகம் கிடையாது. நீங்கள் வெற்றிபெறுவதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” இவ்வாறு ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிச் சுற்றுக்கு முன்னதாக ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்."