தென்னாப்பிரிக்க மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-100203195
Shafali Verma of India play a shotduring the third One day international (ODI) between India and South Africa held at the M.Chinnaswamy Stadium, Bengaluru on the 23rd June 2024. Photo by Arjun Singh / Sportzpics for BCCI

பெங்களூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்துமுடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் லாரா வோல்வார்ட்-தஸ்மின் பிரிட்ஸ் ஜோடியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்ர்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 61(57) ரன்கள் எடுத்திருந்த லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த தஸ்மின் பிரிட்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 38(66) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட்டானார்.

இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மரிஸான் கேப் 7(20) ரன்களிலும், போஷ் 5(9) ரன்களிலும், சுனே லூஸ் 13(23) ரன்களிலும், நதின் டி கிளார்க் 26(46) ரன்களிலும், ஷங்காசே 16(29) ரன்களிலும், நோன்குலுலுகோ மலாபா 0(1) என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த மைக் டி ரிட்டர் 26(31) ரன்களைச் சேர்த்தார்.

இதனால் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்த்ரகர், ஷ்ரேயன்கா படேல் ஆகியோர் தா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா- ஷஃபாலி வர்மா ஜோடியில் வழக்கம்போல நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 25(39) ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.

அதேசமயம் அவருக்கு துணையாக விளையாடிய பிரியா பூனியா 28(40) ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 90(83) ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42(48) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாக, மறுபுறம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19(31) ரன்களையும், ரிச்சா கோஷ் 6(3)ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 40.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Be the first to comment on "தென்னாப்பிரிக்க மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி."

Leave a comment

Your email address will not be published.


*