நியூ டெல்லி: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 9 ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை நடந்துமுடிந்த லீக் சுற்றில் அயர்லாந்தை முதல் போட்டியில் வீழ்த்திய இந்திய அணி, 2வது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத வெற்றியைப் பதிவுசெய்தது.
அதன்பின் நடைபெற்ற 3வது போட்டியில் அமெரிக்காவையும் வீழ்த்திய இந்திய அணி குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கனடாவுக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் இந்திய அணி விளையாட இருந்தது. ஆனால் மழை காரணமாக அந்த ஆட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் சிவம் துபே எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நடந்துமுடிந்த ஐபிஎல் 2024 தொடரின் கடைசிக்கட்ட போட்டிகளில் சொதப்பிய அவர் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அந்த வரிசையில் நடப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஷிவ் தூபே 3(9) ரன்களுக்கு அவுட்டாகி பின்னடைவு ஏற்படுத்தினார்.
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ரிஸ்வான் கொடுத்த எளிதான கேட்சை கோட்டை விட்ட அவர் இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தானுக்கு பரிசளிக்க இருந்தார். ஆனால் பும்ரா மற்றும் பிற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்தியாவை வெற்றிபெற வைத்தனர்.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை சிவம் தூபே சிறப்பாக செயல்படவில்லை, பேட்டிங்கிலும் தடுமாறும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டுமென முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து தொடக்க வீரர்களாக களமிறங்கலாம். அவர்களை மாற்றுவதற்கான எந்தவொரு காரணமும் எனக்கு தெரியவில்லை. அதேபோல அக்சர் படேலும் சிறப்பாக பந்து வீசுகிறார். ஆனால் சிவம் தூபே முதல் 2 போட்டிகளில் நன்றாக செயல்படவில்லை”
பேட்டிங்கில் அவர் என்னவெல்லாம் செய்வார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்திய அணியில் நான் ஒரு மாற்றத்தை பார்க்க விரும்புகிறேன். அதற்கு சஞ்சு சாம்சன் அணிக்குள் வரவேண்டும். ஒருவேளை சிவம் தூபே சிறப்பாக பந்து வீசவில்லையெனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். சாம்சன் எந்தளவுக்கு நன்றாக செயல்படுவார் என்பது நமக்குத் தெரியும். அவருடன் ஒருநாள் பேசும்போது தான், அவர் வாய்ப்புக்காக பசியுடன் காத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.
சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் விக்கெட் கீப்பிங் தவிர்த்து நன்றாக ஃபீல்டிங்கும் செய்யக்கூடியவர். எனவே பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோருடன் இணைந்து அவரும் மிடில் ஆர்டரில் விளையாடலாம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் டார்கெட்டை சேசிங் செய்யும் போது போட்டியை ஃபினிஷிங் செய்வதற்கு நம்மிடம் சேஸிங் மாஸ்டர் விராட் கோலி இருக்கிறார்” இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "தூபே பந்துவீசவில்லை என்றால் சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார்."