பெங்களூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி மூன்று வடிவிலான தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று நடைபெற்றது. பெங்களூரிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா- ஷஃபாலி வர்மா ஜோடியில் ஷஃபாலி வர்மா 7(12) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த தயாளான் ஹேமலதா 12(16) ரன்களுக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10(11) ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 17(28) ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 3(5) ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி 99 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மா ஒருபுறம் நிதானமாக விளையாட, மறுமுனையில் ஸ்மிருதி மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 6ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னர் 37(48) ரன்கள் எடுத்திருந்த தீப்தி சர்மா தனது விக்கெட்டை இழக்க, தொடர்ந்து வந்த பூஜா வஸ்திரேகர் ஸ்மிருதி மந்தனாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் சிறப்பாக விளையாடி சதம் கடந்திருந்த ஸ்மிருதி மந்தனா 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 117(127) ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்துவந்த ராதா யாதவ் 6(7) ரன்களுடன் வெளியேறினார்.
ஆனால் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூஜா வஸ்திரேகர் 31(42) ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழாகாமல் களத்திலிருந்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக அயபோங்கா காகா 3 விக்கெட்டுகளையும், மசபடா கிளாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் லாரா வோல்வார்ட் -தஸ்மின் பிரிட்ஸ் ஜோடியில் லாரா வோல்வார்ட் 4(4) ரன்களிலும், அடுத்துவந்த போஷ்க் 5(13) ரன்களிலும், தஸ்மின் பிரிட்ஸ் 18(31) ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய சுனே லூஸ் மற்றும் மரிஸான் கேப் ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து வந்த நிலையில் மரிஸான் கேப் 24(39) ரன்களிலும், தொடர்ந்து வந்த சுனே லூஸ் 33(58) ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் சினொலா ஜாஃப்டா மட்டும் 27(30) ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக்கட்டினர்.
இதனால் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 37.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய மகளிர் அணி தர்பபில் சிறப்பாக பந்துவீசிய ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங், பூஜா வஸ்திரேகர், ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஷா ஷோபனா ஆகியோரின் அபார ஆட்டத்தால் தென்னப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்திய மகளிர் அணி."