நியூ யார்க்: ஐசிசி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை நேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியானது பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியிலும் முகமது ரிஸ்வானை தவிர்த்து மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர். இதனால் இறுதிவரை போராடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது இந்திய அணி.மேலும் இந்த வெற்றிக்கு அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றிய ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடத்திற்கு முன் காயமடைந்தபோது தம்முடைய கேரியர் முடிந்துவிட்டது என்று பலரும் பேசியதாக தெரிவித்துள்ள பும்ரா, ஐபிஎல் தொடரில் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்ற விமர்சனங்கள் தன்னை நோக்கி எழுந்ததை பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் கம்பேக் கொடுத்தது பற்றி இப்போட்டியின் முடிவில் பேசிய அவர், “பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. இப்போட்டியில் நாங்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருந்ததுதான் எங்களின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தது. ஏனெனில் பேட்டிங் செய்த போது சூழல் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. ஆகையால் இரண்டாவது இன்னிங்ஸில் நாங்களும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம்.
நாங்கள் இந்தியாவில் விளையாடவில்லை என்பதை உணரவில்லை. ஏனெனில் எங்களுக்கு இங்கு கிடைக்கும் ரசிகர்களின் உற்சாகமும்,ஆதரவும் பாராட்டுக்குறியது. அதுமட்டுமின்றி எங்களை இங்குள்ள மக்கள் உண்மையிலேயே நேசிக்கின்றனர். எங்களுக்கு கிடைத்த ஆதரவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் தற்போது அடுத்தடுத்த போட்டிக்கு தயாராகி வருகின்றோம்.
என்னதான் நாங்கள் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும், இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அது எந்த விளையாட்டாக இருந்தாலும், உங்களால் முடிந்ததை முயற்சி செய்யவேண்டும். ஒரு வருடத்திற்கு முன்பு இதே மக்கள் நான் மீண்டும் விளையாட மாட்டேன் என்று சொன்னார்கள். என்னுடைய கேரியர் முடிந்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் தற்போது அந்தக் கேள்விகள் மாறியுள்ளது. இருப்பினும் அதை நான் கண்டுகொள்ளவில்லை.
நான் என்னுடைய திறனை வைத்து சிறப்பாக பந்துவீச முயற்சிக்கிறேன். என் கண்முன் இருக்கும் பிரச்சினைகளை மட்டுமே பார்த்து கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். இது அனைவரும் சொல்வது போல ஒரு சாதாரண பதிலாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற மைதானங்களில் எப்படி பந்துவீசலாம் என்பதில் நான் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.
எப்படி ஷாட்டுகள் அடிப்பதை கடினப்படுத்த முடியும்? எனக்கு சிறந்த வாய்ப்புகள் என்னனென்ன இருக்கிறது? என்பதை பார்ப்பேன். நான் நிகழ்காலத்தில் மட்டும் இருந்து என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் வெளியே மக்கள் கொடுக்கும் விமர்சனங்களை நான் பார்த்தால் அதிகமான உணர்ச்சிகளை சந்தித்து என்னால் முடியாததை செய்ய முயற்சிப்பேன். எனவே விமர்சனங்களை பார்க்காமல் எனக்கென்று ஒரு வளையத்தை உருவாக்கி முன்னோக்கி செல்வதற்கு முயற்சிக்கிறேன்முயற்சிக்கிறேன்” இவ்வாறு பும்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "நான் மீண்டும் விளையாட மாட்டேன் என்று சொன்னார்கள், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான பேட்டியளித்துள்ளார்."