ரோஹித் ஷர்மா அரைசதம் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது இந்திய அணி.

www.indcricketnews.com-indian-cricket-news-100203172

நியூ யார்க்: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பால் ஸ்டிர்லிங்-ஆண்ட்ரூ பால்பிர்னி ஜோடி தொடக்கம் முதலே ரன்களைச் சேர்க்க தடுமாறி வந்த நிலையில் பால் ஸ்டிர்லிங் 2(6) ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் 5(10) ரன்கள் எடுத்திருந்த ஆண்ட்ரூ பால்பிர்னியும் ஆட்டமிழந்தார்.

அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த லோர்கன் டக்கர் -ஹாரி டெக்டர் ஜோடியில் 10(13) ரன்களுடன் லோர்கன் டக்கர் ஆட்டமிழக்க, மறுபுறம் 4(16) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஹாரி டெக்டரும் தனது விக்கெட்டை இழந்தார். இவர்களைத தொடர்ந்து களமிறங்கிய கர்டிஸ் காம்பேர் 12(8) ரன்களுக்கும், ஜார்ஜ் டெக்ரேல் 3(5) ரன்களுக்கும், மார்க் அதிர் 3(2) ரன்களுக்கும், பேரி மெக்கர்த்தி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அயர்லாந்து அணியானது 50 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த கரேத் டெலானி -ஜோஷுவா லிட்டில் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இந்நிலையில் 14(13) ரன்கள் எடுத்திருந்த ஜோஷுவா லிட்டிலும் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரேத் டெலானி 26(14) ரன்களைச் சேர்ந்திருந்த நிலையில் ரன் அவுட்டாகா அயர்லாந்து அணியானது 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும்,  முகமது சிராஜ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடர்க்க வீரர்களான  ரோஹித் சர்மா -விராட் கோலி ஜோடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி ஒரு ரன் மட்டுமே எடுத்து மார்க் அதிர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார்.

அதன்பின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்த ரிஷப் பந்த் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இந்நிலையில் ரோஹித் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேவைப்படும் சமயங்களில் பவுண்டரி அடித்ததுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52(37) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 2(4) ரன்கள் மட்டுமே எடுத்து பென்ஞ்சமின் வைட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ரிஷப் பந்த் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36(26) ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் இந்திய அணி 12.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Be the first to comment on "ரோஹித் ஷர்மா அரைசதம் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்தது இந்திய அணி."

Leave a comment

Your email address will not be published.


*