அவுதாபி: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. 2021இல் நியமிக்கப்பட்டு கடந்த வருடம் நீட்டிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் 2024 ஐசிசி டி20 உலகக்கோப்பையுடன் நிறைவுக்கு வருகிறது.
இதன்காரணமாக பிசிசிஐ இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணபங்களையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்காக விண்ணப்பங்களை வரவேற்ற பிசிசிஐ ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் முன்னாள் வீரர்களை நியமிக்க விரும்பியதாக செய்திகளும் காணப்பட்டது.
இந்நிலையில் விணப்பத்திற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணபங்கள் குவிந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. அதேசமயம் ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரிடம் புதிய பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ அணுகியதாக செய்திகள் வந்தன.
ஏனெனில் ஆலோசகராக வந்ததும் கௌதம் கம்பீர் தலைமையில் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணி நடப்பு வருட ஐபிஎல் கோப்பையை வென்றது. அதுமட்டுமின்றி 2007, 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஏராளமான அனுபவத்தையும் கொண்டுள்ளார்.
இந்நிலையில் 140 கோடி இந்தியர்களை பிரதிபலிக்கும் அணியின் பயிற்சியாளராக வருவதற்கு யார் தான் விரும்ப மாட்டார்கள். நான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கறேன் என்று வௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு விரும்புகிறேன். உங்களுடைய தேசிய அணியின் பயிற்சியாளராக இருப்பதை விட வேறு பெரிய கௌரவம் எனக்கு இருக்க முடியாது. ஏனெனில் நீங்கள் 140 கோடி இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுடைய பிரதிநிதியாக இருப்பீர்கள்.
இந்தியாவின் பிரதிநிதியாக இருப்பதை விட வேறென்ன பெரிதாக இருக்க முடியும். உண்மையில் இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்வதற்கு நான் உதவப் போவதில்லை. 140 கோடி இந்தியர்கள் தான் இந்தியா உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவப்போகிறார்கள். எங்களுக்காக அனைவரும் வேண்டிக்கொண்டால் அவர்களுக்காக நாங்கள் விளையாடத் துவங்கினால் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்” இவ்வாறு கௌதம் கமீபீர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டி20 உலகக்கோப்பை முடிந்ததும் அடுத்த பயிற்சியாளருக்கான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அது கௌதம் கம்பீராக இருக்க பிரகாசமான வாய்ப்புள்ளது. அதற்கு கங்குலி, தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "இந்திய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய கவுரவம் எனக்கு எதுவும் இல்லை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்."