சென்னை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 2(5) ரன்னிலும், டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் திரிபாதி- ஐடன் மார்க்ரம் ஜோடியில் ராகுல் திரிபாதி 9(13) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதீஷ் ரெட்டியும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13(10) ரன்களுடன் வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர வீரரான ஹென்ரிச் கிளாசென் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 20(23) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய ஷபாஸ் அஹ்மத் 8(7) ரன்களிலும், அப்துல் ஷமத் 4(4) ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசெனும் 16(17) ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். இறுதியில் களமிறங்கிய ஜெயதேவ் உனத்கட் 4(11) ரன்களுடன் ஆட்டமிழக்க, மறுபுறம் இறுதிவரை போராடிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 24(19) ரன்களைச் சேர்த்து வெளியேறினார்.
இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கேகேஆர் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் , வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய சுனில் நரைன் -ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜோடியில் சுனில் நரைன் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், பேட் கம்மின்ஸின் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் முதல் பந்திலிருந்தே பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்கவிட, அவருக்கு துணையாக ரஹ்மனுல்லா குர்பாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதன்பின்னரும் தொடர்ந்து இருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிசெய்தனர். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39(32) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஷபாஸ் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52(26) ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.
Be the first to comment on "ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கேகேஆர் அணி."