அஹ்மதாபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ்- விராட் கோலி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த நிலையில், டூபிளெசிஸ் 17(14) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க, மறுபுறம் கோஹ்லியும் 33(24) ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கேமரூன் க்ரீன்- ராஜத் பட்டிதார் ஜோடி பொறுப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அதிரடியாக விளையாடி 27(21) ரன்கள் எடுத்திருந்த கேமரூன் க்ரீனும், அடுத்துவந்த கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து பந்துகளில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜத் பட்டிதாரும் 34(22) ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தபோதும், மூன்றாம் நடுவரின் தவறான முடிவால் நாட் அவுட் என்ற தீர்ப்பின் காரணமாக களத்தில் நீடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுளள்து. அதன்பின் ஜோடி சேர்ந்த மஹிபால் லாம்ரோர்- தினேஷ் கார்த்திக் ஜோடியில் தினேஷ் கார்த்திக் 11(13) ரன்களுக்கும், லாம்ரோர் 32(17) ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். இறுதியில் களமிறங்கிய ஸ்வப்நில் சிங், கர்ண் சர்மா ஆகியோர் பவுண்டரிகளை அடிக்க ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது.
ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தெடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் -டாம் கொஹ்லர் காட்மோர் ஜோடி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 20(15) ரன்களைச் சேர்த்திருந்த டாம் கொஹ்லர் ஆட்டமிழந்தார்.
அதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஜெய்ஸ்வால் 45(30) ரன்களிலும், சாம்சன் 17(13) ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ரியன் பராக் ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் 8(8) ரன்கள் எடுத்திருந்த துருவ் ஜூரெல் எதிர்பாராவிதமாக ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரியான் பராக்-ஷிம்ரான் ஹெட்மையர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், 36(26) ரன்கள் எடுத்திருந்த ரியான் பராக் ஆட்டமிழக்க, மறுமுனையில் 26(14) ரன்களைச் சேர்த்திருந்த ஹெட்மையரும் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் ,ரோவ்மன் பாவெல் 19ஆவது ஓவரின் முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கும், கடைசி பந்தை சிக்ஸருக்கும் அடித்த அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இதில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், லோக்கி ஃபெர்குசன், கேமரூன் க்ரீன், கரண் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்."