அஹ்மதாபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிஃபையர் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா ஜோடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி இரண்டாவது பந்திலேயே க்ளீன் போல்டாகி நடையைக்கட்டினார்.
அவரைத்தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் 3(4) ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்துவந்த நிதிஷ் ரெட்டி 9(10) ரன்களிலும், ஷபாஸ் அஹ்மத் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் திரிபாதி- ஹென்ரிச் கிளாசென் ஜோடி அதிரடியாக விளையாடியதுடன், அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளாசென் 32(21) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் திரிபாதியும் 55(35) ரன்களில் தேவையின்றி ரன் அவுட்டானார். அதன்பின்னர் களமிறங்கிய சன்வீர் சிங் ரன்கள் ஏதுமின்றியும், அதிரடியாக விளையாடி அப்துல் சமத் 16(12) ரன்களிலும், புவனேஷ்வர் குமார் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினர்.
இருப்பினும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் இறுதிவரை களத்தில் நின்றதுடன் அதிரடியாக விளையாடி 30(24) ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா,சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ்-சுனில் நரைன் ஜோடி அதிரடியாக விளையாடிதுடன், அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் 23(14) ரன்களைச் சேர்த்திருந்தபோது நடராஜன் பந்துவச்சில் ஆட்டமிழக்க, மறுபுறம் சுனில் நரைனும் 21(16) ரன்களுடன் பேட் கம்மின்ஸ் பந்துவச்சில் நடையைக்கட்டினார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த வெங்கடேஷ் ஐயர்- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் அரைசதம் கடக்க, ஸ்ரேயாஸ் ஐயரும் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த வெங்கடேஷ் ஐயர் 51(28) ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 58(24) ரன்களையும் சேர்த்ததுடன், இருவரும் இணைந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.
இதன்மூலம் கேகேஆர் அணி 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறி அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஸ்ரேயாஸ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் அதிரடியான பேட்டிங் மூலம், ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கேகேஆர் அணி."