கொல்கத்தா: 17ஆது ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரயால்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவிலுள்ள பர்சபர கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்- அறிமுக வீரர் டாம் கொஹ்லர் காட்மோர் ஜோடியில் ஜெய்ஸ்வால் 4(4) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் காட்மோருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், சாம்சன் 18(15) ரன்களுடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத்தொடர்ந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காட்மோரும் 18(23) ரன்களில் வெளியேறினார். ஆனால் அதன்பின்னர் இணைந்த ரியான் பராக்- ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இருப்பினும் அஸ்வின் 28(19) ரன்களுக்கும், அடுத்துவந்த துருவ் ஜூரெல் ரன்கள் ஏதுமின்றியும், ரோவ்மன் பாவெல் 4(5)ரன்களிலும், டொனவன் ஃபெரீரா 7(8) ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை போராடிய ரியான் பராக் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 48(34) ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த டிரெண்ட் போல்ட்டும் 12(9) ரன்களைச் சேர்த்து ரன் அவுட்டானர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.
பஞ்சாப் அணி தரப்பில் சாம் கரண், ராகுல் சஹார், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதம் எல்லிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ் -பிரப்ஷிம்ரன் சிங் ஜோடியில் பிரப்ஷிம்ரன் சிங் 6(4) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ரைலீ ரூஸோவ் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இருப்பினும் ரூஸோவ் 22(13) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே நம்பிக்கை நட்சத்திரம் ஷஷாங்க் சிங் ரன்கள் ஏதுமின்றி வெளியேறி அதிர்ச்சியளித்தார். இவர்களைத் தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேர்ஸ்டோவும் 14(22) ரன்களின்போது ஆட்டமிழக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைதத் கேப்டன் சாம் கரண் -ஜித்தேஷ் சர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடிய ஜித்தேஷ் சர்மா 22(20) ரன்கள் எடுத்திருந்தபோது ஆடட்மிழக்க, மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த சாம் கரண் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.
இறுதியில் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்திலிருந்த சாம் கரண் 63(41)ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய அஷுதோஷ் சர்மா 17(11) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவச்சில் ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ச்சியாக 4ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Be the first to comment on "சாம் கரணின் அபார பேட்டிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி."