டெல்லி: இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மீதம் 9 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கேகேஆர் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடுமையாக போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில தொடக்கம் முதலே தடுமாறியதுடன், தொடர்ச்சியாக 6 தோல்விகளை பதிவுசெய்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்திருந்த பெங்களூரு அணி முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன்பின் விளையாடிய 5 போட்டிகளில் 5 வெற்றிகளையும் பதிவுசெய்து கம்பேக் கொடுத்துள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியதால், பிளேஆஃப்களுக்கான போட்டி தொடர்ந்து சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமின்றி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் மற்றும் ஒரு நேர்மறையான NRR உடன், அடுத்த சுற்றுக்கு தயாராகி வரும் ஆர்சிபி அணி வரும் மே 18ஆம் தேதி சிஎஸ்கே அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணி மிகவும் முக்கியமான தருணத்தில் தங்களது திறனை வெளிப்படுத்தியுள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “மீண்டும் ஒருமுறை, ஆர்சிபி அணி தஙக்ளது அணியின் திறனை நிரூபித்துள்ளது. இந்நிலையில் வரும் சனிக்கிழமையன்று எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கும் கடைசி லீக் ஆட்டத்தில், பிளேஆஃப் வாய்ப்பில் உள்ள சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணி எதிர்கொள்ள இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்தப்போட்டி ஒரு சிலிர்ப்பான சந்திப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தப்போட்டி முழு ஐபிஎல்லுக்கும் அடையாளமாகும். இந்தியாவில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் இரண்டு மகத்தான பெயர்கள் உண்டு. அது தோனி மற்றும் கோஹ்லி. ஆதிக்கம் செலுத்தும் அந்த இரண்டு நபர்கள், எங்கிருந்தாலும் ஒரு பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார்கள். மேலும் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப்போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
இந்த வார இறுதிக்குப் பிறகு, ஓரிரு முடிவுகள் வீழ்ச்சியடைய வேண்டிய விதத்தில் வீழ்ச்சியடையும் என்று நான் கருதினேன. அதன்பின்னர் பிளேஆஃப் சுற்றுக்கான முதல் நான்கு இடங்களில் யார் வருவார்கள் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இருப்பினும், இது இன்னும் யாருடைய விளையாட்டு. எந்த அணி முதல் நான்கு இடங்களில் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்பது தெரியவில்லை” என்று கூறினார்.
மேலும் ரஜத் படிதார் மற்றும் வில் ஜாக்ஸின் பார்ட்னர்ஷிப் குறித்து பேசிய மூடி, “நடப்பு விளையாட்டின் சூழலில் இது ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப். ஆர்சிபி அணி 200-க்கும் அதிகமான ஸ்கோரை குவிக்கும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் டெல்லி அணியின் அபார பந்தவீச்சில் ஆர்சிபி அணியின் வேகம் குறைந்துவிட்டது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், ரஜத் படிதார் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றனர். குறிப்பாக படிதார், கடந்த ஐந்து அல்லது ஆறு ஆட்டங்களில் பல விரைவு அரைசதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை எதிரணியின் பந்துவீச்சுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி நம்பமுடியாத அளவிற்கு சவாலாக இருக்கம்” இவ்வாறு டாம் மூடி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "ஆர்சிபி அணி மிகவும் முக்கியமான தருணத்தில் தங்களது திறனை வெளிப்படுத்தியுள்ளது என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்."