சென்னை: இந்தியாவின் நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர்-யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ள தடுமாறினாலும், அவ்வபோது பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் அதிரடியாக விளையாட முறபட்ட ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24(21) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பட்லரும் 2 பவுண்டரி உட்பட 21(25) ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைதத் கேப்டன் சஞ்சு சாம்சன் -ரியான் பராக் ஜோடியும் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். இதில் சஞ்சு சாம்சன் 15(19) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த துருவ் ஜூரெல் களமிறங்கியது முதலே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அவருக்கு துணையாக ரியான் பராக்கும் ஒருசில பவுண்டரிகளை விளாசினார்.
இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த துருவு ஜூரெலும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28(18) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ஷுபம் தூபேவும் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ரியான் பராக் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47(35) ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் -ரச்சின் ரவீந்திரா ஜோடியில் அதிரடியாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27(18) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த டேரில் மிட்செல் தனது பங்கிற்கு 4 பவுண்டரிகளை அடித்த கையோடு 22(13) ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி சிங்கிள்களை எடுக்க, அடுத்துவந்த மொயின் அலி 10(13) ரன்களிலும், அதிரடி வீரர் ஷிவம் தூபே 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18(11) ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவும் 5(6) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஃபீல்டர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக மூன்றாம் நடுவரால் அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டு பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 42(41) ரன்களையும், அவருக்கு துணையாக களமிறங்கிய சமீர் ரிஸ்வி 3 பவுண்டரிகளுடன் 15(8) ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் ராஜஸ்தான் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், நந்த்ரே பர்கர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் சிஎஸ்கே அணி 18.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது.
Be the first to comment on "ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சிஎஸ்கே அணி. "