தர்மசாலா: 17ஆவது ஐபிஎல் தொடரின் 58வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவிலுள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ்- விராட் கோலி ஜோடியில் 9(7) ரன்கள் எடுத்திருந்த டூ பிளெசிஸும், 12(7) ரன்கள் எடுத்திருந்த வில் ஜெக்ஸும் அறிமுக வீரர் வித்வாத் கவெரப்பா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பின் கோஹ்லியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஜத் பட்டிதார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுமுனையில் கோஹ்லியும் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இந்நிலையில் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதம் விளாசிய ரஜத் பட்டிதார் 55(23) ரன்களுடன் சாம் கரண் பந்துவீச்சில் வெளியேறியபோது, மழை குறுக்கீட்டால் ஆட்டம் சிறிதுநேரம் தாமதமானது. ஆனால் அதன்பின் தொடங்கிய ஆட்டத்திலும் தனது அதிரடியைக் கைவிடாத கோஹ்லி நடப்பு சீசனில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 600 ரன்களையும் தாண்டினார். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோஹ்லி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோது 92(47) ரன்களைச் சேர்த்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இவரைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கேமரூன் க்ரீன்-தினேஷ் கார்த்திக் ஜோடியில் 18(7) ரன்கள் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த மஹிபால் லாம்ரோரும் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் வெளியேறினார். ஆனால் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த கேமரூன் க்ரீன் 46(27) ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் 6(4) ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்கு துணையாக ஜானி பேர்ஸ்டோவும் ஒருசில பவுண்டரிகளை விளாசி 27(16) ரன்களுடன் வெளியேறினார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரூஸோவ் 21 பந்துகளில் அரைசதம் கடக்க, அவருக்கு துணையாக ஷஷாங்க் சிங்கும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. இந்நிலையில் ரூஸோவ் 61(27) ரன்களுடனும், அடுத்துவந்த ஜிதேஷ் சர்மா 5(4) ரன்களுடனும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோனும் ரன்கள் ஏதுமின்றி வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
அதேசமயம் மறுபுறம் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 37(19) ரன்களில் ரன் அவுட்டாக, அடுத்துவந்த அஷுதோஷ் சர்மாவும் 8(5) ரன்களுடன் நடையைக்கட்டினார். இவர்களைத்தொடர்ந்து 22(16) ரன்கள் எடுத்திருந்த கேப்டன் சாம் கரண் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஹர்ஷல் படேல் ரன்கள் ஏதுமின்றியும், அர்ஷ்தீப் சிங் 4(3) ரன்களுடனும் என அடுத்தடுத்து நடையைக்கட்டினர்.
இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், கரண் சர்மா, லோக்கி ஃபெர்குசன் மற்றும் ஸ்வப்நில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆர்சிபி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
Be the first to comment on "பஞ்சாப் கிங்ஸின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது ஆர்சிபி அணி."