மும்பை: 17ஆவது ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 11(16) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அபிஷேக் சர்மா பும்ரா பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்துவந்த மயங்க் அகர்வாலும் 5(6) ரன்களுக்கு அன்சுல் கம்போஜ் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 48(30) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் பியூஷ் சாவ்லா பந்துவச்சில் ஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் நிதீஷ் ரெட்டி 20(15), மார்கோ ஜான்சென் 17(12), ஷஃபாஸ் அஹ்மத் 10(12) ஆகியோர் ஹர்திக் பாண்டியா பந்துவச்சிலும், ஹென்ரிச் கிளாசென் 2(4), அப்துல் ஷமத் 3(4) ஆகியோர் பியூஷ் சாவ்லா பந்துவீச்சிலும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினர்.
இருப்பினும் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு சில பாவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டதுடன், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35(17) ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து ஃபினிஷிங் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. ஏனெனில் தொடக்க வீரர்களான இஷான் கிஷன் 9(7) ரன்களுக்கு மார்கோ ஜான்சென் பந்துவச்சிலும், ரோஹித் சர்மா 5(4) ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் பந்துவச்சிலும் ஆட்டமிழக்க, அடுத்துவந்த நமந்திரும் ரன்கள் ஏதுமின்றி புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் மும்பை அணி 31 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ் -திலக் வர்மா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழைப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின்னரும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 102(51) ரன்களையும், திலக் வர்மா 6 பவுண்டரிகளுடன் 37(32) ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்து, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்திள்ளது.
Be the first to comment on "சூர்யக்குமார் யாதவின் அபார சதம் மூலம் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி."