கொல்கத்தா: 17ஆவது ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான ப்ரித்வி ஷா-ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஜோடியில் அதிரடி காட்டிய ப்ரித்வி ஷா 13(7) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ஜேக் ஃபிரேசர் 12(7) ரன்களுடன் நடையைக்கட்டினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 6(3)ரன்களுக்கும், அபிஷேக் போரெல் 18(15) ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரிஷப் பந்த்-அக்ஸர் படேல் ஜோடியில் அதிரடியாக விளையாட முற்பட்ட ரிஷப் பந்த் 27(20) ரன்களில் வெளியேற, அடுத்துவந்த நட்சத்திர வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 4(7) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதன்பின்னர் 15(21) ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்ஸர் படேலும், இம்பேக் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா 1(3) ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்நிலையில் களமிறங்கிய குல்தீப் யாதவ் யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் 8(10) ரன்கள் எடுத்திருந்த ரஷிக் சலாம் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த குல்தீப் யாதவ் 35(26) ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது.
கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், சுனில் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான பிலிப் சால்ட்-சுனில் நரைன் ஜோடியில் எப்போதும் அதிரடி காட்டும் சுனில் நரைன் இம்முறை ஸ்டிரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்ய, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இதனால் கேகேஆர் அணி பவர்பிளே முடிவில் விக்கெட்டுகள் ஏதுமின்றி 79 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் சிக்ஸர் அடிக்க முற்பட்ட சுனில் நரைன் அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவரில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலிப் சால்ட்டும் 68(33) ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங்குவும் 11(11) ரன்கள் மட்டுமே எடுத்து லிசாட் வில்லியம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இவரைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்-வெங்கடேஷ் ஐயர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 33(23) ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 26(23) ரன்களையும் குவித்தனர்.
இதன்மூலம் கேகேஆர் அணி 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 12 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
Be the first to comment on "வருண் சக்ரவர்த்தி மற்றும் பில்ப் சால்ட் ஆகியோரின் அதிரடியால், டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது கேகேஆர் அணி."