சென்னை: 17ஆவது ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் -அஜிங்கியா ரஹானே ஜோடியில் ரஹானே 1(3) ரன் மட்டுமே எடுத்து மேட் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் ருதுராஜ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்துவந்த டேரில் மிட்செல் 11(10) ரன்களுடன் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். இவரைத்தொடர்ந்து ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ் அரைசதம் கடந்து அசத்தினார். இந்நிலையில் ஜடேஜா 16(19) ரன்களுடன் மொஹ்சின் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஷிவம் தூபே வழக்கம்போல அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவரைத்தொடர்ந்து ருதுராஜும் சிக்ஸர்களை விளாச, 56 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சதமடித்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசிய தூபே 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், 66(27) ரன்களைச் சேர்த்திருந்த தூபே எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார். இறுதியில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி பவுண்டரி அடித்து இன்னிங்ஸை முடிக்க, மறுபுறம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலருந்த ருதுராஜ் 108(60) ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரரான குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றி தீபக் சஹார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுல் -மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஜோடியில் ஸ்டொய்னிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுபுறம் அதிரடியாக விளையாட முற்பட்ட ராகுல் 16(14) ரன்கள் மட்டுமே எடுத்து முஸ்தபிசூர் ரஹமான் பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத ஸ்டொய்னிஸ் 25 பந்துகளில் அரைசதம் விளாச, மறுமுனையில் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வந்த தேவ்தத் படிக்கல் 13(19) ரன்கள் மட்டுமே எடுத்து மதீஷா பதிரனா பந்துவீச்சில் க்ளீன் போல்டானார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 34(15) ரன்களுடன் மதீஷா பதிரனா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தனது அதிரடியைக் கைவிடாத ஸ்டொய்னிஸ் 56 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இதனால் கடைசி ஓவரில் லக்னோ அணி வெற்றிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிய ஸ்டொய்னிஸ் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ அணி 19.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ஸ்டொய்னிஸ் 124(63) ரன்கள் குவித்திருந்தார்.
Be the first to comment on "மார்கஸ் ஸ்டோயின்ஸ் தனி ஒருவனாக போராடி சிஎஸ்கே அணியை வீழ்த்தி லக்னோ அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்."