அஹமதாபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 32ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில்- விருத்திமான் சகா ஜோடியில் கில் 2 பவுண்டரி அடித்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடக்கம் முதலே தடுமாறி வந்த சகா 2(10) ரன்கள் மட்டுமே எடுத்து கிளீன் போல்டாகி வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 12(9) ரன்கள் எடுத்திருந்தபோது சிங்கிள் எடுக்க முற்பட்டு தேவையில்லாமல் ரன் அவுட்டாக, அடுத்துவந்த டேவிட் மில்லர் 2(6), அபினவ் மனோகர் 8(14), இம்பேக்ட் வீரர் ஷாருக்கான் ரன்கள் ஏதுமின்றி என டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
இதனால் 8.4 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 48 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ரஷித் கான் மற்றும் ராகுல் திவாட்டியா ஜோடி அணியை சரிவிலிந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் திவாட்டியா 10(15) ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ரஷித் கான் மட்டும் தனியொரு ஆளாக போராடி ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் களமிறங்கிய மோகித் சர்மா 2(14) ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் வெற்றிக்காக போராடி வந்த ரஷித் கானும் 31(24) ரன்கள எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதே ஓவரில் நூர் அஹ்மதும் ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக்கட்ட, குஜராத் அணி 17.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ஜேக் ஃபிரெசர் மெக்குர்க்- ப்ரித்வி ஷா ஜோடியில் அதிரடி வீரர் மெக்குர்க் 20(10) ரன்களுடன் ஸ்பென்சர் ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பிரித்வி ஷா 7(6) ரன்களுடன் சந்தீப் வாரியர் பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷாய் ஹோப்- அபிஷேவக் போரில் ஜோடி சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அபிஷேவக் போரில் 15(7) ரன்களுடன் சந்தீப் வாரியர் பந்துவீச்சிலும், ஷாய் ஹோப் 19(10) ரன்களுடன் ரஷித் கான் பந்துவீச்சிலும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 16(11) ரன்களையும், அவருக்கு துணையாக சுமித் குமார் 9(9) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 6 புள்ளிகளைப் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Be the first to comment on "குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது."