கொல்கத்தா: 17ஆவது ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான சுனில் நரைன் -பில் சால்ட் ஜோடியில் சுனில் நரைன் வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் சால்ட் 10(13) ரன்கள் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி சுனில் நரைனுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சுனில் நரைன் அரைசதம் விளாச, மறுமுனையில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 30(18) ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் சென் பந்துவீச்சில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 11(7) ரன்கள் மட்டுமே எடுத்து யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய சுனில் நரைன் 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி நாயகன் ஆண்ட்ரே ரஸல் 13(10) ரன்களுடன் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் 109(56) ரன்களின்போது டிரெண்ட் போல்ட்டின் அபாரமான யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
இறுதியில் வெங்கடேஷ் ஐயர் 8(6) ரன்காளுடன் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபுறம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த ரிங்கு சிங் 20(9) ரன்களைச் சேர்க்க, கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ஜோஸ் பட்லர் ஜோடியில் ஜெய்ஸ்வால் 19(9) ரன்களுடன் வைபவ் அரோரா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் 12(8) ரன்களுடன் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின்னர் ஜோஸ் பட்லருடன் இணைந்த ரியான் பராக் வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் அதிரடியாக விளையாடிவந்த ரியான் பராக் 34(14) ரன்களுடன் ஹர்ஷத் ரானா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த துருவ் ஜுரெல் 2(4) சுனில் நரைன் பந்துவீச்சிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 8(11) மற்றும் ஷிம்ரன் ஹெட்மையர் ரன்கள் ஏதுமின்றி வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக்கட்டினர். இதனால் 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி தடுமாறியது.
ஆனால் மறுமுனையில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த பட்லர் அரைசதம் கடந்து அசத்த, அவருக்கு துணையாக ரோவ்மன் பாவேலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் பாவெல் 26(13) ரன்களின்போது சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது. இருப்பினும் தொடர்ந்து அதிரடி காட்டிய பட்லர் 55 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், கடைசி பந்தில் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த பட்லர் 107(60) ரன்களைக் குவித்திருந்தார்.
Be the first to comment on "பட்லரின் மிரட்டலான சதத்தால் கேகேஅர் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது."