பெங்களூர்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரிலுள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ள 20 பந்துகளிலேயே அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவரைத்தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் 6 ஓவர்களில் ஹைதராபாத் அணி 76 ரன்களைக் குவித்தது. அதன்பின்னரும் தங்களது அதிரடியை கைவிடாத இருவரும் முதல் விக்கெட்டிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தபோது, அபிஷேக் சர்மா 34(22) ரன்களுடன் ரீஸ் டாப்ளே பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் அரைசதம் விளாச, ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார்.
அதன்பின்னர் 102(41) ரன்கள் எடுத்திருந்தபோது டிரேவிஸ் ஹெட் லாக்கி ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஹென்ரிச் கிளாசென் 23 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இருப்பினும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 67(31) ரன்களுடன் லாக்கி ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஐடன் மார்க்ரம்- அப்துல் சமத் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதன் மூலம், ஹதராபாத் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்ற தங்களுடைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளது. இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த அப்துல் சமத் 37(10) ரன்களையும், ஐடன் மார்க்ரம் 32(17) ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் -விராட் கோலி ஜோடி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச, முதல் 6 ஓவர்களில் 79 ரன்களைக் குவித்தனர். இருப்பினும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோஹ்லி 42(20) ரன்களுடன் மயாங் மார்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டு பிளெசிஸ் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 7(4) ரன்கள் மட்டுமே எடுத்துஎடுத்து ரன் அவுட்டாக, அடுத்துவந்த ராஜத் பட்டிதார் 9(5) ரன்களுடன் மயாங் மார்கண்டே பந்துவீச்சில் வெளியேறினார். ஆனால் மறுபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டூ பிளெசிஸ் 62(28) ரன்களுடனும், தொடர்ந்து வந்த சௌரவ் சௌகான் ரன்கள் ஏதுமின்றியும் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மஹிபால் லாம்ரோரும் 19(11) ரன்களுடன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அரைசதத்தை பதிவுசெய்த தினேஷ் கார்த்திக், 83(35) ரன்களுடன் நடராஜன் பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அனுஜ் ராவத் 25(14) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
Be the first to comment on "இறுதிவரை போராடிய ஆர்சிபி அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது."