தோனியின் கேமியோ மற்றும் பதிரனாவின் அபார பந்துவீச்சு போன்றவை மும்பை இந்தியன்ஸை முறியடிக்க சிஎஸ்கேவுக்கு உதவியது.

www.indcricketnews.com-indian-cricket-news-1002156
MS Dhoni of Chennai Superkings during match 29 of the Indian Premier League season 17 (IPL 2024) between Mumbai Indians and Chennai Super Kings held at the Wankhede Stadium, Mumbai on the 14th April 2024. Photo by Pratik Khot / Sportzpics for IPL

மும்பை: ரசிகர்களால் பெரிதும் எதிபார்க்கப்பட்ட 17ஆவது ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 29ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. மும்பையிலூள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி பேட்டிங் செய்ய சிஎஸ்கே அணியில் வழக்கத்திற்கு மாறாக ரச்சின் ரவீந்திராவுடன் அஜிங்கியா ரஹானே தொடக்கம் கொடுத்தார். ஆனால் பெரிதளவில் எடுபடாத இந்த மாற்றத்தால் ரஹானே 5(8) ரன்களுக்கு ஜெரால்டு கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முற்பட்ட ரவீந்திரா, ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த கையோடு 21(16) ரன்களுடன் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ஷிவம் தூபே ஜோடி தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரைசதம் அடிக்க, மறுமுனையில் தூபேவும் 27 பந்துகளில் அரைசதம் விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களைத் தாண்டியது.

அதன்பின்னரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் 69(40) ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, மறுமுனையில் தூபே வழக்கம்போல அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும் 17(14) ரன்கள் எடுத்திருந்தபோது டேரில் மிட்செல் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் இறுதியில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி 20(4) ரன்களை குவிக்க, மறுபுறம் தூபே 66(38) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா -இஷான் கிஷான் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களைக் குவித்தனர்.

இந்நிலையில் இஷான் கிஷான் 23(15) ரன்கள் எடுத்திருந்தபோது நட்சத்திர வீரர் பதிரனா வீசிய முதல் பந்திலியே   ஆட்டமிழக்க, அடுத்துவந்த அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவும் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினார். ஆனால் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அவருக்கு துணையாக களமிறங்கிய திலக் வர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் 31(20) ரன்கள் எடுத்திருந்தபோது திலக் வர்மா பதிரனா பந்துவீச்சில் வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 2(6) ரன்களுக்கு துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சிலும், அடுத்துவந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடும் முயற்சியில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி 13(5) ரன்களுடன் முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச்சிலும், ரொமாரியோ ஷெஃபெர்ட் 1(2) ரன்னுடன் பதிரனா பந்துவீச்சிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் கடைசிவரை போராடிய ரோஹித் சர்மா 61 பந்துகளில் சதமடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலுருந்து 105(63) ரன்களைச் சேர்த்து மும்பை ரசிகர்களுக்கு ஆறுதலளித்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Be the first to comment on "தோனியின் கேமியோ மற்றும் பதிரனாவின் அபார பந்துவீச்சு போன்றவை மும்பை இந்தியன்ஸை முறியடிக்க சிஎஸ்கேவுக்கு உதவியது."

Leave a comment

Your email address will not be published.


*