ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து குஜராத் டைட்டனின் அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது.

www.indcricketnews.com-indian-cricket-news-1002035
Umesh Yadav of Gujarat Titans celebrates the wicket of Yashaswi Jaiswal of Rajasthan Royals during match 24 of the Indian Premier League season 17 (IPL 2024) between Rajasthan Royals and Gujarat Titans held at the Sawai Mansingh Stadium, Jaipur on the 10th April 2024. Photo by Deepak Malik / Sportzpics for IPL

ஜெய்ப்பூர்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீசட்சை நடத்தின. ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.  

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ஜோஸ் பட்லர் ஜோடியில் ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 24(19) ரன்களுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பட்லரும் 8(10) ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினார்.

ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சஞ்சு சாம்சன் -ரியான் பராக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில் அதிரடியாக விளையாடத் தொடங்கிய ரியான் பராக் 36 பந்துகளில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுமுனையில் சாம்சனும் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது.

அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் பராக் 76(48) ரன்கள் எடுத்திருந்தபோது மோஹித் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சாம்சன் 68(38) ரன்களையும், அவருக்கு துணையாக ஷிம்ரான் ஹெட்மையர் 13(5) ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு ஃபினிஷிங் கொடுத்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதனைத்தொடர்ந்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய குஜராத்  அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் -சாய் சுதர்ஷன் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தபோது அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுதர்ஷன் 35(29) ரன்களுடன் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக்கட்டினார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 4(6) ரன்களுக்கும், அபினவ் மனோகர் 1(2) ரன்னிலும் என குல்தீப் சென் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த விஜய் சங்கரும் 16(10) ரன்களுடன் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் 72(44) ரன்களுடன் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஷாருக்கான் 14(8) ரன்களுடன் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த ராகுல் திவேத்தியா -ரஷித் கான் ஆகியோர் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ரஷித் கான் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார்.

இந்நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ராகுல் திவேத்தியா ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இருப்பினும் கடைசி பந்தில் குஜராத் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷித் கான் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது. 

Be the first to comment on "ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து குஜராத் டைட்டனின் அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது."

Leave a comment

Your email address will not be published.


*