மும்பை: 17ஆவது ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா -இஷான் கிஷான் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 49(27) ரன்களுக்கு க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
அவரைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த இஷான் கிஷான் 42(23) ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த திலக் வர்மாவும் 6(5) ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா -டிம் டேவிட் ஜோடி முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின்னர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் நிதானமாக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா 39(33) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் டேவிட் 45(21) ரன்களுடனும், அவருக்கு துணையாக களமிறங்கிய ரொமாரியோ செஃபெர்ட் 39(10) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஆன்ட்ரிச் நோர்ட்ஜே மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் -பிரித்வி ஷா ஜோடியில் டேவிட் வார்னர் 10(8) ரன்களுடன் ரொமாரியோ செஃபெர்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின் பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் போரல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பிரித்வி ஷா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ரித்வி ஷா 66(40) ரன்களுடன் க்ளீன் போல்டானார்.
இவரைததொடர்ந்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த அபிஷேக் போரெல் 41(31) ரன்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் 1(3) ரன்னுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
இருப்பினும் தனது அதிரடியைக் கைவிடாத டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, மறுபுறம் களமிறங்கிய வீரர்களோ அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 71(25) ரன்களைக் குவித்த போதும், டெல்லி அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Be the first to comment on "ரொமாரியோ செஃபெர்ட்டின் அதிரடியால், டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ் அணி."