அஹ்மதாபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஷுப்மன் கில்- விருத்திமான் சஹா ஜோடியில் சஹா 11(13) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் கில்லுடன் இணைந்த கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் அதிரடியாக விளையாட முற்பட்டபோது வில்லியம்சன் 26(22) ரன்களுடன் வெளியேறினார். இவரைதத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாச, மறுமுனையில் கில்லும் பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இந்நிலையில் சுதர்ஷன் 33(19) ரன்களுடன் ஆட்டமிழக்க, மறுபுறம் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின்னரும் கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் களமிறங்கிய விஜய் சங்கர் 8(10) ரன்களில் வெளியேறி மீண்டும் சொதப்பினார். ஆனால் அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியா அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 89(48) ரன்களுடனும், மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திவேத்தியா 23(8) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன்மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான கேப்டன் ஷிகர் தவான் 1(2) ரன் மட்டுமே எடுத்து உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜானி பேர்ஸ்டோவ்-பிரப்ஷிம்ரன் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேர்ஸ்டோவ் 22(13) ரன்களுடனும், மறபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்ஷிம்ரன் சிங் 35(24) ரன்களுடனும் நூர் அகமது பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய சாம் கரண் 5(8) ரன்களுடன் அஸ்மத்துல்லா ஒமர்சாய் பந்துவீச்சிலும், சிக்கந்தர் ரஸா 15(16) ரன்களுடன் மோஹித் ஷர்மா பந்துவீச்சிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாறற்மளித்தனர்.
இவர்களைத்தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஷஷாங்க் சிங் -ஜிதேஷ் சர்மா ஜோடியில் ஜிதேஷ் சர்மா 16(8) ரன்களின்போது ரஷித் கான் பந்துவீச்சில் ஆடட்மிழக்க, அடுத்துவந்த அஷுதோஷ் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இறுதியில் இருவரும் அதிரடியாக விளையாடி வர, கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அடிக்க முற்பட்ட அஷுதோஷ் சர்மா 31(17) ரன்களுடன் தர்ஷன் நல்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழக்க ஆட்டத்தின் பரப்பரப்பு கூடியது.
ஆனாலும் ஷஷாங்க் சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தலிருந்ததுடன், 61(29) ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "ஷாங்காய் சிங் மற்றும் அஷுதோஷீ சர்மா ஆகியோரின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது."