விசாகப்பட்டினம்: இந்தியாவில் நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்வதாக அறிவித்தது.
அதன்படி இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஜோடியில் சுனில் நரைன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, மறுமுனையில் பில் சால்ட் 18(12) ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் ஆன்ட்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் ஆட்டமழந்தார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட, மறுபுறம் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நரைன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இந்நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நரைன் 85(39) ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் விளாசி அசத்திய அங்கிரிஷ் ரகுவன்ஷி 54(27) ரன்களைச் சேர்த்து ஆன்ட்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் ஒருபுறம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18(11) ரன்கள் மட்டுமே எடுத்து கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங்கும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 28(8) ரன்கள் எடுத்து ஆன்ட்ரிச் நோர்ட்ஜேவிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸல் 41(19) ரன்களைச் சேர்த்து இஷந்த் சர்மாவின் அபாரமான யார்க்கர் மூலம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்தது அசத்தியது. இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் -பிரித்வி ஷா ஜோடியில் பிரித்வி ஷா 10(7) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மிட்செல் மார்ஷ் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வநத் டேவிட் வார்னரும் 18(13) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அபிஷேக் போரலும் ரன்கள் ஏதுமின்றி நடையைக்கட்டினார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரிஷப் பந்த் -டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடியில் அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தினார். இருப்பினும் 55(25) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 54(32) ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் கேகேஆர் அணி தரப்பில் பந்துவீசிய வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கேகேஆர் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "டெல்லி கேபிட்டல்ஸ் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்து அசத்தியது."