ஜெய்ப்பூர்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடியில் ஜெய்ஸ்வால் 5(7) ரன்களில் முகேஷ் குமார் பந்தில் கிளீன் போல்டாக, அவரைத்தொடர்ந்து பெரிதளவில் சோபிக்கத் தவறிய பட்லரும் 11(16) ரன்களுடன் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் 15(14) ரன்களின் போது கலீல் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ரியான் பராக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். இந்நிலையில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்கள் பறக்கவிட்ட அஸ்வின் 29(19) ரன்கள் எடுத்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் அட்டமிழக்க, அடுத்துவந்த துருவ் ஜூரெலும் 20(12) ரன்களுடன் ஆன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரியான் பராக் 7 பவுண்டரி, 6 சிக்ஸர் உட்பட 84(45) ரன்களும், அவருக்கு துணையாக ஷிம்ரன் ஹெட்மயர் 14(7) ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ஷ் 23(12) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிக்கி பூய் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உடப்ட 49(34) ரன்களின்போது ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட்டும் 28(26) ரன்களுடன் நடையைககட்டினார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஜோடியில் போரெல் 9(10) ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்டப்ஸ் உடன் அக்ஸர் படேல் இணைந்தார். இதில் அக்ஸர் படேல் பெரிதளவில் ரன்கள் அடிக்கவில்லை என்றாலும், மறுபுறம் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி டெல்லி அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்.
எனினும், கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை ஆவேஷ் கான் சிறப்பாக பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்களில் தோல்வியை தழுவியது. இதில் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 44(23) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார்.
ராஜஸ்தான் அணி சார்பில் நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Be the first to comment on "ரியான் பராக்கின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்து அசத்தியது."