ஹைதராபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரான மாயங்க் அகர்வால் 11(13) ரன்களின்போது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி தொடர்ந்து அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் விளாசி சாதனை படைத்தனர்.
இந்நிலையில் ஹெட் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 62(24) ரன்களுடன் ஜெரால்டு கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபிஷேக் சர்மா 3 பவுண்டரி, 7 சிக்சர் உட்பட 63(23) ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் வெளியேறினார். இவர்களைத்தொடர்நது ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் ஹென்ரிச் கிளாசென் தன் பங்கிற்கு 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.
அதன்பின்னரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளாசென் 4 பவுண்டரி,7 சிக்சர் உட்பட 80(34) ரன்களுடனும், மறுமுனையில் மார்க்ரம் 2 பவுண்டரி,1 சிக்ஸர் உட்பட 42(28) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களைக் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா- இஷான் கிஷன் ஜோடியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இஷான் 4 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 34(13) ரன்களின்போது ஆட்டமிழக்க, மறுமுனையில் ரோஹித் ஷர்மா 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 26(12) ரன்களுடன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் நடையைக்கட்டினர்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த நமன் திர் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து அபாரமாக விளையாடி வந்த நிலையில், நமன் திர் 2 பவுண்டரி ,2 சிக்ஸர் உட்பட 30(14) ரன்களில் ஜெயதேவ் உனத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 2 பவுண்டரி 6 சிக்சர் உட்பட 64(34) ரன்களுடன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 24(20) ரன்கள் மட்டுமே குவித்து ஜெயதேவ் உனத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் டிம் டேவிட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் 19ஆவது ஓவரில் 7 ரன்களும், கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதில் டிம் டேவிட் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 42(22) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்காக போராடிய போதும்,மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததும். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.
Be the first to comment on "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபார பந்துவீச்சால் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது."