அஹமதாபாத்: 17ஆவது ஐபிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் -விருத்திமான் சஹா ஜோடியில் அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய விருத்திமான் சஹா 19(15) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில்லும் 31(22) ரன்களில் வெளியேறினார்.
அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த சாய் சுதர்ஷன் -அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாட முற்பட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 17(11) ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அதிரடி வீரர் டேவிட் மில்லரும் 12(11) ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.
அதேசமயம் மறுமுனையில் சாய் சுதர்சனும் 45(39) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியா தனது பங்கிற்கு 22(15) ரன்களில் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 6(5) ரன்களையும், ரஷித் கான் 4(3) ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, தொடர்ந்து வந்த நமன் திர் அதிரடியாக விளையாடி 20(10) ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா -டெவால் ப்ரீவிஸ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 43(29) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவால்ட் ப்ரீவிஸும் 46(38) ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இவர்களைத்தொடர்ந்து அதிரடி வீரர்களான டிம் டேவிட் 11(10) ரன்களுக்கும், திலக் வர்மா 25(19) ரன்களுக்கும், ஜெரால்ட் கோட்ஸி 1(3) ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா முதல் பந்தை சிக்சருக்கும், இரண்டாவது பந்த பவுண்டரிக்கு விளாசி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன்பின் மூன்றாவது பந்தை கணிக்க தவறிய ஹர்திக் பாண்டியா சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டமிழக்க, மறுமுனையில் பியூஸ் சாவ்லாவும் ரன்கள் ஏதுமின்றி வெளியேறினார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Be the first to comment on "பரபரப்பான ஆட்டத்தில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றிபெற்றது."