சென்னை: ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதியான இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் லீக் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இவ்விரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் தோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 21ஆம் தேதியான நேற்று நடைபெற்ற ஐபிஎல் அணி கேப்டன்களுக்கான போட்டோஷூட்டில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றதன் மூலமாக இது உறுதியானது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்திய அணியை போலவே சிஎஸ்கே அணியிலும் அனைத்து வீரர்களையும் மிகச் சிறப்பாக வழி நடத்தினார். அதிலும் குறிப்பாக கடந்த வருடம் முழங்கால் வலியையும் தாண்டி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் ஐந்தாவது கோப்பையை வென்று சென்னை அணியை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க உதவினார்.
இருப்பினும் தற்போது 41 வயதை கடந்துவிட்ட தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2019 முதல் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கையில் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள தோனி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடும் முடிவை எடுத்துள்ளார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 2008–2023 வரை கேப்டனாக செயல்பட்டு வந்த தோனியின் சகாப்தம் நிறைவுக்கு வந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 226 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட தோனி சென்னைக்கு 5 கோப்பைகள் உட்பட 133 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அவரை தவிர்த்து ரோஹித் சர்மா உட்பட மற்ற எந்த வீரருமே 100 வெற்றிகள் கூட பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடருக்கான கேப்டன்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்கு முன்பாகத்தான் இந்த முடிவை தோனி எடுத்தது தமக்கே தெரியும் என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,” தோனி எந்த முடிவு எடுத்தாலும் அது சிஎஸ்கே அணிக்கு நன்மையை கொடுக்கும் என்பதால், அந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருடைய முடிவை நீங்களும் மதிக்க வேண்டும். இது தோனியின் முடிவு. கேப்டன்கள் சந்திப்புக்கு சற்று முன்பாகத் தான் தோனி இந்த முடிவை எடுத்துள்ளதை நானே தெரிந்து கொண்டேன். 2022இல் ஜடேஜாவை கேப்டனாக நியமித்தபோது அது வேலை செய்யவில்லை. ஆனால் இம்முறை தோனி எடுத்துள்ள முடிவு வித்தியாசமானது” என்று கூறியுள்ளார்.
சிஎஸ்கே தலைமை நிர்வாக இயக்குனர் கூறுவது போல உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாததால் தடுமாறிய ஜடேஜா மீண்டும் அந்த பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்தார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிராவின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டிருப்பதால் ருதுராஜ் சென்னையை வழிநடத்த தகுதியானவர் என்று தோனி தேர்வு செய்துள்ளதார்.
Be the first to comment on "சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்எஸ் தோனி விலகல், அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்."