சென்னை: ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் துவங்கும் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதல் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான பயணத்தை வெற்றியுடன் துவங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதேசமயம் 41 வயதை கடந்த எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. 2019 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
அதுமட்டுமின்றி கடந்த வருடம் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட அவர் அதையும் தாண்டி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து சிஎஸ்கே அணிக்கு ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல உதவினார். இருப்பினும் முழங்கால் வலி காரணமாக பெரும்பாலும் அவர் கடைசி ஓவரில் வந்து ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.
இந்நிலையில் விரைவில் 42 வயதை தொடவிருக்கும் எம்.எஸ். தோனியால் வேகமாக ஓட முடியாது என்பதை நாங்கள் அறிவோம் என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார். ஆனால் அதைசமயம் பெஞ்சமின் பட்டன் எனும் பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல வயது அதிகரிக்க அதிகரிக்க தோனி முன்னேற்றத்தை சந்தித்து வருவதாகவும் ஹசி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி சிங்கிள், டபுள் ரன்களை ஓடி எடுப்பது தோனிக்கு கடினம் என்பதால் கடைசி நேரத்தில் களமிறங்கி கணிசமான பந்துகளை எதிர்கொண்டு ஃபினிஷிங் செய்வதற்கான பயிற்சிகளை மட்டும் எடுத்து வருவதாக ஹசி தெரிவித்துள்ளார். அது தான் இம்முறையும் பேட்டிங்கில் அசத்துவதற்கு தோனி வைத்திருக்கும் திட்டம் என்று தெரிவித்துள்ள அவர் மேலும் இதுகுறித்து பேசுகையில், “எம்எஸ் தோனி ஐபிஎல்க்கு நன்றாக தயாராகி வருகிறார். தற்சமயம் அவருடைய முழங்கால் நன்றாக இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் வலைப்பயிற்சியில் தோனி பேட்டிங்கில் அசத்தி வருகிறார். அவர் பெஞ்சமின் பட்டன் போல தொடர்ந்து முன்னேறி வருபவர் என்பதை நான் கண்டிப்பாக ஒப்புக்கொள்வேன்.
இருப்பினும் அவர் தற்போது இளமையாக இல்லை. எனவே அவரால் வேகமாக ஓடி ரன்களை எடுப்பது மிகவும் கடினமாகும். ஆனால் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அதிகமாக ஓட வேண்டிய அவசியம் இல்லை என்பதால், அவரால் அப்போது தெளிவாகப் பந்தை அடிக்க முடியும். அதற்கான பயிற்சிகளை தான் தற்போது தோனி எடுத்து வருகிறார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது” இவ்வாறு மைக்கேல் ஹசி கூறினார்.
Be the first to comment on "ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சி போட்டியில் எம்.எஸ்.தோனி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பாராட்டியுள்ளார்."