மும்பை: ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பெரும் தொகையை கொடுத்து வாங்கியது மட்டுமின்றி ரோஹித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் நியமித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோகித் சர்மா நடப்பு சீசனில் ஒரு சாதாரண வீரராக மட்டுமே செயல்பட உள்ளார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கி, ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்கள் பலரும் அந்த மாற்றம் குறித்து நிறையவே விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் அதேசமயம் ஹார்டிக் பாண்டியா இதைப்பற்றி எவ்வித கருத்தையும் பேசாமல் அமைதி காத்து வந்தார்.
இருப்பினும் இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா குறித்து பல்வேறு கருத்துக்களை ஹர்திக் பாண்டியா முதன்முறையாக செய்தியாளர்களிடம் மனம் திறந்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர்,“ரோஹித் சர்மாவுடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நிச்சயம் நடப்பு சீசனில் ரோகித் ஷர்மா கேப்டனாக இல்லாதது எந்தவொரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், உதவ ரோஹித் ஷர்மா இருக்கிறார்.
ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு உதவியாக இருக்கும். அவருடைய தலைமையின் கீழ் இந்திய அணி ஏரளமான சாதனைகளை படைத்துள்ளது. அதேபோல அவருடைய தலைமையில் மும்பை அணியும் பெரிய சாதனைகளை படைத்துள்ளது. அதை நான் இப்போதிலிருந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன். அவருடைய கேப்டனாக இருப்பது எனக்கு எந்தவொரு வித்தியாச உணர்வையும் ஏற்படுத்தவில்லை. அவருடைய கேப்டன்ஸியில் நான் என்னுடைய கெரியர் முழுவதும் விளையாடியுள்ளேன்.
எனவே சீசன் முழுவதும் அவர் எனக்கு ஆதரவாக என் தோள் மீது கை போட்டு உதவுவார் என்பது எனக்கு தெரியும். எனது கிரிக்கெட் பயணத்தில் பெரும்பான்மையான பகுதியை ரோஹித் ஷர்மாவின் தலைமையின் கீழ் விளையாடியிருக்கிறேன். அதனால் அவர் எனது கேப்டன்ஸியின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. எனக்கு இதுவொரு நல்ல அனுபவமாக இருக்கும்.
ரோகித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முடிவு சற்று பின்னடைவாகும். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரசிகர்களை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் விளையாட்டில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நான் முரண்பாடுகளை கட்டுப்படுத்த விரும்புகிறேன். அதேசமயம் என்னால் கட்டுப்படுத்த முடியாத இடத்தில் நான் கவனம் செலுத்தவில்லை. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய கருத்துக்களை சொல்வதற்கு முழு உரிமை உண்டு” இவ்வாறு ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "ரோஹித் ஷர்மா எனது தலைமையின் கீழ் விளையாடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்."