சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் எவ்வித அழுத்தமும் கொடுக்காததால், வீரர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர் என்று டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-1007732

சென்னை: ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இத்தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  விளையாடவுள்ளது. 

சமீபத்தில் நடந்துமுடிந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியானது ஷர்துல் தாகூர், ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்சல், முஸ்தபிஜுர் போன்ற நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்தது. இதனால் மீண்டும் கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது என்று சென்னை அணியின் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த முதல் போட்டிக்காக சென்னை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ நேற்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போட்டியில் ”ஐபிஎல் அரங்கில் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு ‘தல’ தோனி அல்லது ‘ரிலாக்சாக’ செயல்படும் வீரர்கள் மட்டுமே காரணமல்ல. சிஎஸ்கே அணி நிர்வாகமும் முக்கிய காரணம். ஏனெனில் இந்த அணியை பொறுத்தவரை வெளியில் இருந்து யாரும் தலையிடுவது கிடையாது. உரிமையாளர்கள் எவ்வித அழுத்தமும் கொடுக்காததால், வீரர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். இதுவே சென்னை அணிக்கு அழகு சேர்க்கிறது. தொடர்ந்து வெற்றிநடையை தொடரவும் வழிவகுக்கிறது,” என்று டுவைன் பிராவோ தெரிவித்தார்.

மேலும் அணியின் வீரர்கள் குறித்து பேசிய அவர்,”அணியின் துவக்கத்தில் ரன் மழை பொழிய ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். கடந்த முறை இளம் பந்துவீச்சு கூட்டணியை வைத்து நாங்கள் சாதித்தோம். இம்முறை’ஆல்-ரவுண்டர்’ ஷர்துல் தாகூரின் வரவு கூடுதல் ‘போனசாக’ அணிக்கு அமைந்துள்ளது. அதேசமயம் முஸ்தபிஜுர் இருப்பதால் அனுபவ படையாக மாறியுள்ளது. தீபக் சஹார், முகேஷ் சவுத்ரி, ‘ஜூனியர் மலிங்கா’ பதிரனா, கடந்த சீசனில் அசத்திய துஷார் தேஷ்பாண்டே என தரமான பவுலர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

டி20 போட்டிகளை பொறுத்தவரை கடைசி கட்ட ‘டெத் பவுலிங்’ முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சமயத்தில் ரன்களை கட்டுப்படுத்தி, துணிச்சலாக வீரர்கள் பந்துவீச வேண்டும். இதற்கு தேவையான திறமையை ஒவ்வொரு வீரரும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். முதலில் பயிற்சியில், அதன்பின் ஆட்டத்தில் என திறமையை வெளிப்படுத்த வேண்டும். கடந்த முறை எங்களது அணியின் ‘டெத் பவுலிங்’ மிகச்சிறப்பாக அமைந்தது. அதேபோல இம்முறை மீண்டும் அசத்துவோம். கேப்டன் ‘கூல்’ தோனி, சிறந்த நிர்வாகம், அனுபவம் கொண்ட இளம் வீரர்கள் என அனைத்தும் இருப்பதால், சென்னை அணி கோப்பையை தக்க வைக்கவே வாய்ப்பு அதிகம்” இவ்வாறு டுவைன் பிராவோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Be the first to comment on "சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் எவ்வித அழுத்தமும் கொடுக்காததால், வீரர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர் என்று டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*