மும்பை: ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இத்தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தீவிர சிகிச்சைக்கு பிறகு கிட்டத்தட்ட 14 மாதங்கள் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது.
ஆனால் தனது காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பந்த் அதன்பிறகு பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதற்கேற்றவாறு அவர் விளையாடிவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் நடப்பு சீசனில் ரிஷப் பந்த் விளையாடுவதை உறுதிசெய்திருந்தார்.
அதேபோல தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவதற்கு ஒப்புதல் வழங்கினர். ஏனெனில் சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில், ரிஷப் பந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இத்தொடரில் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடுவார் என்று டெல்லி அணியின் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ரிஷப் பண்ட் குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இதில், “ரிஷப் பந்த் நன்றாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில் அவருடைய உடற்தகுதியை அறிவிப்போம். வரும் டி20 உலகக் கோப்பை தெடரில் ரிஷப் பந்த் விளையாடினால், அது பெரிய விஷயமாக இருக்கும். ரிஷப் பந்த் இந்திய அணியின் சொத்து. அவரால் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்தால் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார். எனவே, ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் எப்படி விளையாடுகிறார் என்பதை உற்று நோக்குவோம்” இவ்வாறு ஜெய் ஷா கூறியிருந்தார் .
இதனையடுத்து 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பந்த் இதுகுறித்து கூறுகையில், “அணியுடன் மீண்டும் இணையும் அதே நேரத்தில் உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன். நான் மீண்டும் கிரிக்கெட்டில் அறிமுகமாகப் போவதாக உணர்கிறேன். எனது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கும், மிக முக்கியமாக பிசிசிஐ மற்றும் என்சிஏ ஊழியர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தங்களின் அன்பும் ஆதரவும் தான் எனக்கு மகத்தான பலத்தை அளித்துள்ளது” என்று ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
Be the first to comment on "மீண்டும் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகப்போவதாக உணர்கிறேன் என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்."