டெல்லி: மகளிர் பீரிமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் முன்னேறியுள்ள நிலையில், மீதமுள்ள இடத்தை எந்த அணி பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்தமுடிந்த 19ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் வழக்கத்திற்கு மாறாக ஹீலி மேத்யூஸுடன் சஜீவன் சஜனா தொடக்கம் கொடுத்தார். இதில் இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 43 ரன்களைச் சேர்த்தனர் .
அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 26(23) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹீலி மேத்யூஸ் சோஃபி டிவைன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30(21) ரன்களில் சஜீவன் சஜனாவும், அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன்கள் ஏதுமின்றியும் எல்லிஸ் பெர்ரியின் அடுத்தடுத்த பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர் 2(5), நாட் ஸ்கைவர் பிரண்ட் 10(15),அமஞ்சோத் கவுர் 4(2), பூஜா வஸ்திரேகர் 6(10) ஆகியோரும் அடுத்தடுத்து எல்லிஸ் பெர்ரி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுமைரா காசி 4(7) ஆஷா சோபனா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷப்னிம் இஸ்மாயில் 8(8) ஸ்ரேயங்கா பாட்டீல் பந்துவீச்சிலும், சைகா இஷாக் 1(4) சோஃபி மோலினக்ஸ் பந்துவீச்சிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் ஸ்மிருதி மந்தனா -சோஃபி மோலினக்ஸ் ஜோடியில் சோஃபி மோலினக்ஸ் 9(9) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹீலி மேத்யூஸிடம் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஸ்மிருதி மந்தனா 11(13) ரன்களுக்கு நாட் ஸ்கைவர்-பிரண்ட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை சோஃபி டிவைனும் 4(2) ரன்களில் ஷம்னைம் இஸ்மாயில் பந்துவீச்சில் வெளியேறினார்.
ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த எல்லிஸ் பெர்ரி -ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக விளையாடியதுடன், இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த எல்லிஸ் பெர்ரி 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 40(38) ரன்களையும், ரிச்சா கோஷ் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36(28) ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 15 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Be the first to comment on "ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரியின் அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், ஆர்சிபி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது."