மும்பை: வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் இத்தொடருக்காக தீவிரமாக தயாராகிக் வருகின்றனர். மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் நடைபெறவிருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடந்துமுடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களை தவறவிட்டார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகினார்.
இருப்பினும் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே முகமது ஷமி முழு உடற்தகுதியை பெற்று கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் முகமது ஷமி தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பாண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்தும் இந்திய வீரர் முகமது ஷமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் முகமது ஷமி இந்திய அணியில் இணைவார்” என தெரிவித்தார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி விலகியது உறுதியாகியுள்ளது.
நடப்பாண்டு ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது. அதேசமயம், ஜூன் 9ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டியும் நடைபெறவுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் அண்மையில் நடந்துமுடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தி அசத்தினார். ஆனால் அவர் தற்போது டி0 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Be the first to comment on "டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து முகமது ஷமி விலகினார். வேகப்பந்து வீச்சாளரின் மறுபிரவேசம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்."